பட்டாபிராமில் தொண்டு நிறுவன ஊழியர் வீட்டில் 42 பவுன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளை

பட்டாபிராமில் தொண்டு நிறுவன ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 42 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

Update: 2018-10-16 22:45 GMT

ஆவடி,

ஆவடியை அடுத்த பட்டாபிராம், மாடர்ன் சிட்டி, 4–வது தெருவை சேர்ந்தவர் இம்மானுவேல்(வயது 47). அங்கு வாடகை வீட்டில் முதல் மாடியில் வசித்து வருகிறார். கீழ்த்தளத்தில் வீட்டின் உரிமையாளர் வசித்து வருகிறார்.

இம்மானுவேல் கிறிஸ்தவ தொண்டு நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்கிறார். இவரது மனைவி சாந்தி (46). திருநின்றவூரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்கிறார். இவர்களுக்கு எஸ்தர்(4) என்ற மகள் உள்ளார்.

நேற்று முன்தினம் மாலை எஸ்தரின் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் இம்மானுவேல், வீட்டை பூட்டி விட்டு மகளை அழைத்துக்கொண்டு மனைவியுடன் கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். பின்னர் அவர்கள் இரவு 9.30 மணிக்கு வீட்டுக்கு திரும்பி வந்தனர்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டுக்குள் இருந்த 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடந்தன.

அதில் வைக்கப்பட்டு இருந்த 42 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பட்டாபிராம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் அம்பத்தூர் போலீஸ் துணை கமி‌ஷனர் ஈஸ்வரன், பட்டாபிராம் உதவி கமி‌ஷனர் ரமேஷ், இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் கொள்ளை நடந்த வீட்டுக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

கைரேகை நிபுணர்கள் வந்து கொள்ளையர்களின் கைரேகையை பதிவு செய்தனர். மேலும், போலீஸ் மோப்ப நாய் ஜான்சி அங்கு வரவழைக்கப்பட்டது.

கொள்ளை சம்பவம் நடந்த வீட்டில் இருந்து ஓடிய மோப்பநாய் ஜான்சி, இந்துக்கல்லூரி ரெயில் நிலையம் வந்து திருவள்ளூர் மார்க்கமாக செல்லும் நடைமேடையில் நின்று விட்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவம் நடந்த வீட்டு வாசலில் கிடந்த சிறிய அளவிலான துணி மற்றும் சி.டி. கவர் ஆகியவற்றை கைப்பற்றினார்கள்.

இந்த சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக அம்பத்தூர் துணை கமி‌ஷனர் ஈஸ்வரன் உத்தரவின் பேரில் உதவி கமி‌ஷனர் ரமேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

தனிப்படை போலீசார் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்