குருவித்துறை பெருமாள் கோவிலில் கொள்ளை போன ஐம்பொன் சிலைகள் மீட்பு: நிலக்கோட்டை அருகே முட்புதரில் கிடந்தன

குருவித்துறை பெருமாள் கோவிலில் கொள்ளை போன ஐம்பொன் சிலைகள் நிலக்கோட்டை அருகே முட்புதரில் கிடந்தன. அவற்றை போலீசார் மீட்டனர்.

Update: 2018-10-16 21:45 GMT
திண்டுக்கல்,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறையில் சித்திர ரத வல்லபபெருமாள் கோவில் மிகவும் பழமையானது ஆகும். இந்த கோவிலில் குருபகவான் தவக்கோலத்தில் காட்சி தருவது சிறப்பு வாய்ந்தது. கடந்த 13-ந்தேதி மாலை பூஜைகளை முடித்துவிட்டு கோவிலை அர்ச்சகர்கள் பூட்டிவிட்டு சென்று விட்டனர்.

இந்த நிலையில் கோவிலில் இருந்த பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, சீனிவாச பெருமாள் ஆகிய 4 ஐம்பொன் சிலைகள் கொள்ளைபோனது. இதுகுறித்து காடுப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து பார்த்தபோது 2 மர்ம நபர்கள் அதிகாலை 3 மணிக்கு கோவிலின் பக்கவாட்டு கதவை உடைத்து சிலைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இந்த நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவுக்குட்பட்ட கல்யாணிப்பட்டி பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் தனது மகளுக்கு காய்ச்சல் இருந்ததால் நேற்றுமுன்தினம் இரவு 11.30 மணியளவில் அவரை மொபட்டில் அழைத்துக்கொண்டு உத்தப்பநாயக்கனூர் சென்றார். பின்னர் அங்கு மகளுக்கு டாக்டரிடம் ஊசி போட்டுவிட்டு திரும்பி வந்தபோது நிலக்கோட்டை அருகே விளாம்பட்டி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கல்யாணிப்பட்டி பிரிவில் சாலை ஓரத்தில் முட்புதரில் மொபட் வெளிச்சத்தில் ஏதோ ஒரு பொருள் மின்னியது. உடனே கணேசன் அருகில் சென்று பார்த்தார். அப்போது அவை ஐம்பொன்னால் ஆன சாமி சிலைகள் என தெரியவந்தது. உடனே அவர் இதுகுறித்து தனது நண்பர் மூலம் விளாம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து விளாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முட்புதரில் கிடந்த 4 ஐம்பொன் சிலைகளை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இந்த சிலைகள் எந்த கோவிலில் திருடப்பட்டதாக இருக்கும்? என விசாரித்தபோது அவை குருவித்துறை சித்திர ரத வல்லபபெருமாள் கோவிலில் கொள்ளைபோன சிலைகள் என தெரியவந்தது.

இதுகுறித்து சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்குமாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் உடனே விளாம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு நேற்று காலை 6 மணிக்கு வந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேசிடம் இருந்து 4 ஜம்பொன் சிலைகளையும் பெற்றுக் கொண்டார். பின்னர் அந்த சிலைகளை சோழவந்தான் போலீஸ் நிலையத்துக்கு அவர் கொண்டுசென்றார்.

போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல், தென்மண்டல ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

விலை மதிப்பு மிக்க ஐம்பொன் சிலைகளை கொள்ளையடித்து முட்புதரில் வீசிச்சென்ற கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்