சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: பம்பையில் இன்று அகிம்சை வழியில் மிகப்பெரிய போராட்டம் பந்தளம் மன்னர் பேட்டி
சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து, பம்பையில் இன்று (புதன்கிழமை) அகிம்சை வழியில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற உள்ளது என்று பந்தளம் மன்னர் கூறினார்.
செங்கோட்டை,
சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து, பம்பையில் இன்று (புதன்கிழமை) அகிம்சை வழியில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற உள்ளது என்று பந்தளம் மன்னர் கூறினார்.
பந்தளம் மன்னர்
கேரள மாநிலம் பந்தளம் மன்னர் மகம் திருநாள் கேரள வர்மராஜா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நெல்லை மாவட்டம் செங்கோட்டை வந்தார். அவரை அய்யப்ப பக்தர்கள் வரவேற்றனர்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
கட்டுப்படுத்த முடியாது
சபரிமலை கோவிலுக்கு பெண்களும் செல்லலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பால் உருவாகி உள்ள பிரச்சினை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெண்களை கோவிலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்பதை கோர்ட்டுக்கு கொண்டு செல்ல வைத்தது கம்யூனிஸ்டுகள் தான். ஒவ்வொரு கோவிலுக்கும் ஆகம விதிகள் உண்டு. ஆகம விதி சட்டத்துக்கு உட்பட்டது அல்ல. ஆச்சாரம், நம்பிக்கைகளை கோர்ட்டு கட்டுப்படுத்த முடியாது. சபரிமலை வழக்கில் ஒரு நீதிபதியின் கருத்து மட்டுமே தீர்ப்பு அல்ல. மற்ற நீதிபதிகள் அனைவரும் கருத்துகள் எதுவும் கூறவில்லை.
நாங்கள் மக்களை சந்திக்கும் இடங்களில் எல்லாம் தாய்மார்கள் தங்கள் வீட்டு பெண் பிள்ளைகளை சபரிமலைக்கு அனுப்ப மாட்டோம் என்று உறுதியாக கூறுகிறார்கள். கடந்த 14–ந்தேதி டெல்லியல் பேரணி நடத்தி, பிரதமரிடம் மனு கொடுத்து உள்ளோம்.
மிகப்பெரிய போராட்டம்
சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து, நாளை (அதாவது இன்று) அமைதியான முறையில் அகிம்சை வழியில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடக்கிறது. இதில் பக்தர்கள் திரளாக வந்து கலந்து கொள்ள வேண்டும். சட்டத்துக்கும், உணர்வுக்கும் தொடர்பு இல்லை. எனவே அனைவரும் திரண்டு வந்து போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள். இந்த வழக்கில் மேல் முறையீடு தீர்ப்பை அய்யப்பன் பார்த்துக் கொள்வான். காத்திருப்போம். நிச்சயமாக நல்லது நடக்கும் என்று நம்புவோம்.
நாளை (இன்று) சபரிமலையில் தேவசம் போர்டு அதிகாரிகள் முன்னிலையில் மேல்சாந்தி தேர்வு நடக்கிறது. 10 பேரில் ஒருவரை மேல்சாந்தியாக எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தேர்வு செய்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
தென்காசி கோவிலில் தரிசனம்
பின்னர் பந்தளம் மன்னர் தென்காசி காசிவிசுவநாத சுவாமி கோவிலுக்கு வந்தார். அவரை அச்சன்கோவில் ஆபரண பெட்டி வரவேற்பு குழு தலைவர் அரிகரன், செயலாளர் மாடசாமி, அய்யப்ப சேவா சங்க தலைவர் அழகிரி, செயலாளர் சுப்புராஜ், ஆலோசகர் மாரிமுத்து மற்றும் அய்யப்ப பக்தர்கள் வரவேற்றனர். அவர் கோவிலில் தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:–
பெண்ணியவாதிகள் பின்னணி
சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற விவகாரத்தின் பின்னணியில் பெண்ணியவாதிகள் இருக்கின்றனர். அய்யப்பன் யார்? சபரிமலையின் பூர்வீக கதை தெரியாமல் உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியாகி உள்ளது. தற்போது, அந்த தீர்ப்புக்கு எதிராக பக்தர்கள் அதிக அளவில் மனு கொடுத்து வருகிறார்கள்.
திருவாபரணம் சபரிமலைக்கு செல்லாது என்று எங்களது(பந்தள மன்னர்) குடும்பத்தினர் கூறியது போன்ற தவறான தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அவ்வாறு எந்த தகவலும் எங்கள் தரப்பில் கூறப்படவில்லை. ஐதீகப்படி திருவாபரணம் சபரிமலைக்கு வழக்கம்போல் செல்லும்.
இவ்வாறு அவர் கூறினார்.