கூடங்குளம் அருகே சர்வதேச விமான நிலையம் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
கூடங்குளம் அருகே சர்வதேச விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
வள்ளியூர்,
கூடங்குளம் அருகே சர்வதேச விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
ஆலோசனை கூட்டம்
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா கூடங்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கான இடங்களை ஆய்வு செய்வதற்காக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று கூடங்குளம் வந்தார். முன்னதாக, அவர் செட்டிகுளம் அணுவிஜய் நகரத்தில் நடந்த அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் விமான போக்குவரத்து துணை பொது மேலாளர் நீரஜ் குப்தா, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், சேரன்மாதேவி உதவி கலெக்டர் ஆகாஷ், ராதாபுரம் தாசில்தார் புகாரி மற்றும் டெல்லி விமான நிலைய அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
பேட்டி
கூட்டத்தின் முடிவில், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:–
கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கும், பக்தர்களுக்கும் பயனுள்ள வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாமிதோப்பில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய அரசினால் கொள்கை முடிவு எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அங்கு ஆய்வு மேற்கொண்டேன். ஆனால் குமரி மாவட்டத்தில் விமான நிலையம் அமைப்பதற்கான பூகோள ரீதியிலான அமைப்பும், 500 ஏக்கர் கொண்ட நிலப்பரப்பும் அமையவில்லை.
அதனால் நெல்லை மாவட்டங்களின் எல்லை பகுதிகளான கூடங்குளம் அருகில் உள்ள இருக்கன்துறை, பழவூர், காவல்கிணறு, பணகுடி போன்ற பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டு, புதிய விமான நிலையம் அமைப்பதற்கான இடங்களை பார்வையிட்டு வருகிறோம். பூலோக ரீதியாகவும், 500 ஏக்கர் நிலப்பரப்பு அமையும் பட்சத்தில் இங்கு சர்வதேச விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது, பாஜ.க. மாவட்ட மகளிர் அணி செயலாளர் கனியமுதா, மாவட்ட பொதுச் செயலாளர் தமிழ்செல்வன், மாவட்ட செயலாளர் அருள் காந்தி, பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாவட்ட தலைவர் கலைச்செல்வன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.