ஆம்னி பஸ்களை கண்ட இடங்களில் நிறுத்தினால் நடவடிக்கை கலெக்டர் ராஜாமணி எச்சரிக்கை

ஆம்னி பஸ்களை கண்ட இடங்களில் நிறுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ராஜாமணி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

Update: 2018-10-15 23:00 GMT
திருச்சி,

திருச்சி மத்திய பஸ் நிலையம் மற்றும் ஜங்ஷன் பகுதியில் ஆம்னி பஸ்களால் அவ்வப்போது கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது வழக்கமான ஒன்றாகும். விடுமுறை நாட்களில் சென்னை, பெங்களூருவுக்கு செல்லும் ஆம்னி பஸ்கள் மத்திய பஸ் நிலையத்தை சுற்றி உள்ள அனைத்து சாலைகளிலும் நிறுத்தி வைக்கப்படும்போது இரு சக்கர வாகனத்தில் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. ஆம்னி பஸ் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்பது திருச்சி மாநகர மக்களின் நீண்ட கால கோரிக்கை ஆகும்.

இந்த நிலையில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கும், மத்திய பஸ் நிலையத்திற்கும் இடையில் பழைய திருவள்ளுவர் பஸ் நிலையம் அருகில் உள்ள ரெயில்வே இடத்தில் புதிதாக ஆம்னி பஸ் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. 50-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் கழிப்பறை வசதிகளுடன் அமைக்கப்பட்டு வரும் இந்த ஆம்னி பஸ் நிலையம் வருகிற 18-ந்தேதி முதல் செயல்பட இருக்கிறது.

புதிய ஆம்னி பஸ் நிலையத்தினால் போக்குவரத்து நெருக்கடி பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுமா? என திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணியிடம் கேட்டதற்கு ‘திருச்சியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்படும் வரை ஆம்னி பஸ் நிலையம் அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் செயல்படும். ஆம்னி பஸ் நிலையம் திறக்கப்பட்ட பின்னர் மத்திய பஸ் நிலையம் பகுதியில் வேறு எந்த இடத்திலும் ஆம்னி பஸ்களை நிறுத்தக்கூடாது. ஆம்னி பஸ் நிலையத்தில் மட்டுமே அவர்கள் பஸ்களை நிறுத்தி வைத்துக்கொள்ளவேண்டும். அங்கிருந்து மட்டுமே பயணிகளை ஏற்றி செல்லவேண்டும். மீறி கண்ட இடங்களில் நிறுத்தினால் போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்க மாநகர போலீஸ் கமிஷனருக்கு அறிவுரை வழங்கப்பட்டு இருக்கிறது’ என்றார்.

மேலும் செய்திகள்