ஆரணி பஸ் நிலையத்தில்: பஸ் சக்கரத்தில் சிக்கி விவசாயி பலி - மனைவி கண் முன்பே பயங்கரம்

ஆரணி பஸ் நிலையத்தில் மனைவி கண் முன்பே தனியார் பஸ் சக்கரத்தில் சிக்கி விவசாயி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2018-10-15 22:00 GMT
ஆரணி,

ஆற்காடு தாலுகா திமிரியை அடுத்த பாத்திக்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 73). விவசாயி. இவரது மனைவி சாமந்தி (62). இவர்களது மகள் மஞ்சுளா ஆரணியை அடுத்த கரிக்காத்தூர் கிராமத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் பாலகிருஷ்ணன், மனைவியுடன் கரிக்காத்தூர் கிராமத்திற்கு சென்று மகளை பார்த்து விட்டு பஸ்சில் ஆரணிக்கு திரும்பினார்.

ஆரணி பழைய பஸ் நிலையம் வந்ததும் பஸ்சில் இருந்து இருவரும் இறங்கினர். பின்னர் தங்கள் ஊருக்கு செல்லும் பஸ் நிற்கும் இடத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கிக்கொண்டிருந்த தனியார் பஸ், திடீரென புறப்பட்டது. அந்த பஸ், எதிர்பாராத விதமாக பாலகிருஷ்ணன் மீது மோதியது. இதில் கீழே விழுந்த பாலகிருஷ்ணன் சக்கரத்தில் சிக்கினார். இதனை பார்த்த அவரது மனைவி சாமந்தி மற்றும் அங்கிருந்த பயணிகள் கூச்சலிடவே பஸ் அங்கேயே நிறுத்தப்பட்டது.

பின்னர் பாலகிருஷ்ணனை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் ஆம்புலன்ஸ் வராததால் அங்கிருந்த பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் சிலர் ஆட்டோவில் பாலகிருஷ்ணனை ஏற்றி ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் பரிசோதித்ததில் பாலகிருஷ்ணன் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஆரணி நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆரணி பழைய பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் நடுவழியிலேயே நின்று கொள்கின்றன. பின்னால் வரும் பஸ்களும் செல்ல முடியாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பயணிகளை இறக்குகின்றனர். திடீரென பஸ் புறப்படும்போது இறங்க முயல்பவர்கள் கீழே விழுந்து விடும் அபாயம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

மேலும் தனியார் பஸ்கள் குறிப்பிட்ட நேரம் வந்ததும் புறப்படுவதில்லை. இதனால் பின்னால் புறப்பட வேண்டிய பஸ் டிரைவருக்கும் இவர்களுக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது.

மேலும் பஸ் வந்து நிற்கும்போது பயணிகள் இறங்குவதற்குள் தின்பண்ட வியாபாரிகள் தாவிக்குதித்து ஏறி இடையூறை ஏற்படுத்துகின்றனர். எனவே போலீசார் மற்றும் போக்குவரத்து கழக அதிகாரிகள் பழைய பஸ்நிலையத்தில் அடிக்கடி சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர். 

மேலும் செய்திகள்