கொடைக்கானலில் காரை திருட முயன்ற வாலிபரை கட்டி வைத்து தர்ம அடி
கொடைக்கானலில் காரை திருட முயன்ற வாலிபரை கட்டி வைத்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.;
கொடைக்கானல்,
கொடைக்கானல் செண்பகனூர் தைக்கால் பகுதியை சேர்ந்தவர் ஜோசப் (வயது 45). இவர், சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஒட்டி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, தனது காரை வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு உள்ளே தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் காரை இயக்கும் சத்தம் கேட்டது. இதனால் திடுக்கிட்டு எழுந்த அவர், வெளியே வந்து பார்த்தார்.
அப்போது அவருடைய காரை 2 பேர் திருட முயற்சித்து கொண்டிருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திருடன், திருடன் என்று கூச்சல் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். இதில் டிரைவர் இருக்கையில் அமர்ந்து காரை இயக்கிய வாலிபர், பொதுமக்களிடம் சிக்கி கொண்டார். மற்றொருவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
பிடிபட்ட வாலிபரை, அவர் திருட முயன்ற காரின் முன் பக்கத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். பின்னர் இதுகுறித்து கொடைக்கானல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்தனர். பொதுமக்களிடம் இருந்து பிடிபட்ட வாலிபரை மீட்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த வாலிபர், மதுரை மாவட்டம் செக்கானூரணியை சேர்ந்த மோகன் (வயது 30) என்று தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடத்தியதில், கொடைக்கானல் கல்லறைமேடு பகுதியில் நிறுத்தியிருந்த அ.தி.மு.க. பிரமுகர் ஜாபர்சாதிக் என்பவரின் காரை அவர்கள் திருடிய தகவல் வெளியானது. அந்த காரை, திருடி அவர்கள் ஓட்டி வந்துள்ளனர்.
செண்பகனூர் அருகே வந்தபோது, டீசல் இல்லாமல் கார் நின்று விட்டது. அதன்பிறகே ஜோசப் என்பவரின் காரை அவர்கள் திருட முயன்றுள்ளனர். இதுமட்டுமின்றி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, கொடைக்கானலில் திருடு போன கார் குறித்தும் மோகனிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே தப்பி ஓடிய மற்றொரு வாலிபரை பிடிக்க, சப்-இன்ஸ்பெக்டர் பொன் குணசேகரன் தலைமையிலான தனிப்படையினர் செக்கானூரணிக்கு விரைந்துள்ளனர்.