ரிஷிவந்தியம் அருகே: தீயில் கருகி தொழிலாளி பலி
ரிஷிவந்தியம் அருகே கரும்பு தோட்டத்தில் எரிந்த தீயை அணைக்க முயன்ற போது தொழிலாளி தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
ரிஷிவந்தியம்,
ரிஷிவந்தியம் அருகே உள்ள மரூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்து மகன் அண்ணாமலை (வயது 65), தொழிலாளி. நேற்று இவர் அதே பகுதியை சேர்ந்த அழகப்பிள்ளை மகன் வேலு என்பவருக்கு சொந்தமான விளை நிலத்தில் கரும்பு தோகைகளை தீ வைத்து கொளுத்தினார்.
அப்போது பலத்த காற்று வீசியதால் பக்கத்தில் இருந்த கரும்பு தோட்டத்துக்கும் தீ பரவி எரிய தொடங்கியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அண்ணாமலை கரும்பு தோட்டத்தில் எரிந்த தீயை அணைக்க முயன்றார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது தீ பற்றியது. இதில் உடல் முழுவதும் தீ பரவி எரிந்ததில் அவர் வலியால் அலறி துடித்தார். இந்த சத்தம் கேட்டு அருகில் உள்ள வயல்களில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் விரைந்து வந்து அண்ணாமலையை மீட்க முயன்றனர். ஆனால் கரும்பு தோட்டத்தில் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் அவர்களால் அண்ணாமலையை மீட்க முடியவில்லை. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த பகண்டை கூட்ரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் குணபாலன், வீரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயில் கருகி பலியான அண்ணாமலையின் உடலை பார்வையிட்டு, அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து அண்ணாமலையின் மகன் சக்திவேல் பகண்டைகூட்ரோடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரும்பு தோட்டத்தில் எரிந்த தீயை அணைக்க முயன்ற போது தொழிலாளி தீயில் கருகி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.