குருவித்துறை கோவிலில் சிலைகள் கொள்ளை: ஐ.ஜி.பொன். மாணிக்கவேல் இன்று விசாரணை
சோழவந்தான் குருவித்துறை கோவிலில் சாமி சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டதை தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் இன்று விசாரணை மேற்கொள்கிறார்.
சோழவந்தான்,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறையில் பிரசித்தி பெற்ற வல்லப பெருமாள் கோவில் உள்ளது. இங்கு நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் 4 ஐம்பொன் சிலைகளை கொள்ளையடித்துவிட்டு சென்று விட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த கொள்ளையில் துப்பு துலக்க சமயநல்லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார், சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார்ஆகியோரது தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி இருந்தது. அதனை அடையாளம் கண்டுபிடிக்கும் வகையில் தெளிவாக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
மேலும் பழைய குற்றவாளிகளின் பட்டியலை சேகரித்து அதன்மூலம் துப்புத்துலக்கிட முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சிலை திருட்டு தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு மலைச்சாமி நேற்று கோவிலுக்கு வந்தார். கோவிலின் ஒவ்வொரு பகுதியாகச்சென்று அவர் பார்வையிட்டார். கொள்ளையர்கள் புகுந்த இடம், சிலைகள் இருந்த இடம், அவர்கள் தப்பிச்சென்ற இடம் ஆகியவற்றை அவர் பார்வையிட்டார்.
மேலும் கொள்ளையர்கள் விட்டுச்சென்ற தண்ணீர் பாட்டில், கடப்பாரை, பட்டை தீட்டி கொண்டு வந்திருந்த இரும்பு கம்பி, உடைத்து வீசிவிட்டு சென்றிருந்த பூட்டு உள்ளிட்டவற்றை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் கொள்ளையர்கள் நீளமான குச்சியில் துணியை சுற்றி கொண்டு வந்துள்ளனர். அதனை கோவில் வளாகத்தில் வீசிச்சென்று இருந்தனர். அதனையும் அவர் பார்த்தார்.
இதனைதொடர்ந்து தனிப்படை போலீசாரிடம் ஆலோசனை நடத்தினார். கோவில் பணியாளர்களிடமும் அவர் விசாரணை நடத்தினார்.
இந்த கொள்ளை தொடர்பாக விசாரணை நடத்திட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்க வேல் இன்று (செவ்வாய்க்கிழமை) சோழவந்தான் வருகிறார். அவர் கோவிலை பார்வையிடுவதோடு அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்துகிறார்.