கீழடியில் அகழாய்வுக்காக தோண்டிய குழிகளை மூடும் பணி

கீழடியில் 4–ம் கட்ட அகழாய்வு பணிக்காக தோண்டப்பட்ட குழிகள் மூடப்பட்டன.

Update: 2018-10-15 22:30 GMT

திருப்புவனம்,

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழடியில் மத்திய தொல்லியல் துறை சார்பில் கடந்த 2015–ம் ஆண்டு முதல் 3 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வந்தன.

இதனையடுத்து 4–ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி தமிழக அரசு சார்பில் ரூ.55 லட்சம் செலவில் நடைபெற்று வந்தது. இதில் தங்கம், கண்ணாடியிலான பொருட்கள் உள்பட 5 ஆயிரத்து 820 பழங்கால பொருட்கள் கிடைத்தன. இதுவரை சுமார் 14 ஆயிரம் பொருட்கள் அங்கிருந்து எடுக்கப்பட்டுள்ளன.

இந்த பொருட்களை கொண்டு கீழடியில் 2 ஏக்கர் அளவில் ரூ.1 கோடி செலவில் கட்டிடம் கட்டி அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு சார்பில் நடைபெற்ற 4–ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிக்காக கீழடி பள்ளிச்சந்தைபுதூர் பகுதியில் 34 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணி நடைபெற்றது.

இதற்கிடையில் கடந்த 13–ந்தேதி அமைச்சர் மாபா பாண்டியராஜன் மற்றும் அதிகாரிகள் கீழடிக்கு வந்து அகழாய்வு நடைபெற்ற இடங்களை பார்வையிட்டார்.

இந்தநிலையில் 4–ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிக்காக கீழடியில் தோண்டப்பட்ட 34 குழிகளை மூடும் பணி ஜே.சி.பி. வாகனம் மூலம் நேற்று மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து இன்றும் குழிகளை மூடும் பணி நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்