தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை திரும்ப பெற்றுத்தர மனு; போலீசார் ஆர்ப்பாட்டத்திற்கு மறுத்ததால் வாக்குவாதம்

தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை பெற்றுத்தர கோரி மனு கொடுக்க வந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர். அதற்கு போலீசார் மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

Update: 2018-10-15 22:15 GMT

சிவகங்கை,

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனைப் பட்டா, விபத்து நிவாரணம் கோருதல், பசுமை வீடு கேட்டல், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை கோருதல், வங்கிக் கடன், மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் உபகரணங்கள் கேட்டல், ரே‌ஷன் கார்டு கோருதல், இலவச தையல் மி‌ஷன் வழங்கக் கேட்டல், ஆக்கிரமிப்பு அகற்ற கேட்டல், பட்டா ரத்து தொடர்பான மேல்முறையீடு, மின் இணைப்பு கோருதல் உள்பட 294 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் ராமபிரதீபன் உள்பட அனைத்துத்துறை அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதில் தனியார் நிதி நிறுவனத்தில் நிறுவனத்தில் முகவர்கள், முதலீடு செய்தவர்கள் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் வீரையா, முறைசாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பொன்னுச்சாமி ஆகியோர் தலைமையில் வந்து மனுக்கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறியுள்ளதாவது:– கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் நிதி நிறுவனத்தில் முகவராக பணியில் சேர்ந்தோம். ஒவ்வொரு முகவரும் தங்களது பகுதிக்குள்பட்ட 10 முதலீட்டாளர்களை தேர்ந்தெடுத்து, அவர்களிடமிருந்து குறிப்பிட்ட தொகையை வசூல் செய்து நிறுவனத்திடம் ஒப்படைத்தோம். இந்தநிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த நிறுவனம், முதலீட்டாளர்களின் தொகை ரூ.60 ஆயிரம் கோடியை மோசடி செய்துள்ளது.

அந்த பணத்தை பங்குச்சந்தை பாதுகாப்பு அமைப்பு சார்பில் திருப்பி தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது. எனவே முதலீட்டாளர்களின் பணத்தை திரும்ப பெற்றுத் தர விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

முன்னதாக மனு அளிக்க வந்த முகவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகர் மனு அளிக்க வந்தவர்களிடம் உங்களது கோரிக்கைகளை கலெக்டரிடம் மனுவாக வழங்கலாம். ஆனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு அனுமதி இல்லை என்றார். இதனால் அவர்கள் சிறிது நேரம் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதையடுத்து ஒரு சிலர் மட்டும் கோரிக்கை மனுவை கலெக்டரிடம் கொடுப்பதற்காக உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்