ஆத்தூரில் பரிதாபம்: மனைவி பிரிந்து சென்றதால், தொழிலாளி தற்கொலை

ஆத்தூரில் மனைவி பிரிந்து சென்றதால், தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-10-15 21:30 GMT
ஆறுமுகநேரி, 

ஆத்தூர் புது நகரைச் சேர்ந்தவர் செந்தூர்பாண்டி. இவருடைய மகன் ராஜா (வயது 38). இவர் சென்னையில் உள்ள டீக்கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி அனிதா. இவர்களுக்கு ஆதித்யா (10) உள்பட 2 மகன்கள் உள்ளனர். ராஜா கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சொந்த ஊரில் நடந்த கோவில் கொடை விழாவில் கலந்து கொள்வதற்காக வந்தார். பின்னர் அவர், மீண்டும் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது குடித்து வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது.

நேற்று முன்தினம் மாலையில் ராஜா வழக்கம்போல் மது குடித்து விட்டு தனது வீட்டுக்கு சென்றார். இதனை மனைவி கண்டித்ததால், அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் அனிதா தன்னுடைய கணவரிடம் கோபித்துக்கொண்டு, தன்னுடைய மகன்களுடன் அப்பகுதியில் உள்ள பெற்றோரின் வீட்டுக்கு சென்றார்.

இதனால் மனமுடைந்த ராஜா தனது வீட்டில் மனைவியின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலையில் மூத்த மகன் ஆதித்யா பள்ளிக்கூடத்துக்கு செல்வதற்காக, தனது சீருடையை எடுக்க தந்தையின் வீட்டுக்கு சென்றான். அங்கு அவன், தன்னுடைய தந்தை தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து கதறி அழுதான். குடும்பத்தினர் அங்கு வந்து கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தற்கொலை செய்த ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்