பள்ளி பஸ் படிக்கட்டில் சிக்கி தாய் கண் முன்னே சிறுவன் பலி

பள்ளி பஸ் படிக்கட்டில் சிக்கி தாய் கண் முன்னே சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

Update: 2018-10-15 22:30 GMT
செந்துறை,

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள சோழன் குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் இளவரசு. இவரது மனைவி கலைச்செல்வி. இவர்களுக்கு நவீன் (வயது 7) மற்றும் நிதிஷ் என்ற 2½ வயது சிறுவன் உள்பட 2 குழந்தைகள். நவீன் அப்பகுதியில் உள்ள அறிஞர் அண்ணா நர்சரி பிரைமரி பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் நேற்று காலை கலைச்செல்வி, நவீனை பள்ளி பஸ்சில் அனுப்ப, நிதிசை அழைத்து கொண்டு அப்பகுதிக்கு வந்துள்ளார். பின்னர் கலைச்செல்வி நவீனை பஸ்சில் ஏற்றி விட்டு கொண்டிருந்தார். அப்போது நிதிஷ் பஸ்சின் படிக்கட்டில் அருகில் நின்று கொண்டிருந்தான். இதையடுத்த திடீரென பஸ் டிரைவர் பஸ்சை இயக்கி உள்ளார்.

அப்போது பஸ் படிக்கட்டின் அருகில் நின்று கொண்டு இருந்த நிதிஷ் பஸ் படிக்கட்டில் மாட்டி இழுத்து சென்றது. இதைப்பார்த்த கலைச்செல்வி மற்றும் அருகில் இருந்தவர்கள் குழந்தை, குழந்தை என்று சத்தம் போட்டனர். சத்தத்தை கேட்ட டிரைவர் பஸ்சை உடனடியாக நிறுத்தினார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் பஸ்சில் சிக்கிய நிதிசை மீட்டு பார்த்த போது படுகாயங்களுடன் நிதிஷ் இறந்திருந்தது தெரியவந்தது. இதையறிந்த கலைச்செல்வி, நிதிஷ் உடலை பார்த்து கதறி அழுதது அங்கிருந்தவரை கண்கலங்க வைத்தது. இதற்கிடையே பஸ் டிரைவர் அங்கிருந்து ஓடி விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த குவாகம் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்து நிதிஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாயின் கண் முன்னே சிறுவன் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்