ஜமகண்டியில் ஆனந்த் நியாமகவுடா போட்டி பல்லாரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக உக்ரப்பா அறிவிப்பு இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார்கள்

பல்லாரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக உக்ரப்பா அறிவிக்கப்பட்டுள்ளார். ஜமகண்டி சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஆனந்த் நியாம கவுடா போட்டியிடு கிறார். இருவரும் இன்று (செவ்வாய்க்கிழமை) வேட்பு மனு தாக்கல் செய்கிறார்கள்.

Update: 2018-10-15 22:15 GMT
பெங்களூரு,

ராமநகர், ஜமகண்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகள், சிவமொக்கா, மண்டியா, பல்லாரி ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகள் என மொத்தம் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் (நவம்பர்) 3-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மனு தாக்கல் செய்ய இன்று (செவ்வாய்க் கிழமை) கடைசி நாளாகும்.

இந்த 5 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி ஜமகண்டி, பல்லாரி ஆகிய 2 தொகுதிகளில் மட்டும் போட்டியிடுகிறது. மற்ற 3 தொகுதிகளில் கூட்டணி கட்சியான ஜனதா தளம்(எஸ்) போட்டியிடுகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

ஜமகண்டி தொகுதியில், காங்கிரஸ் சார்பில் சாலை விபத்தில் மரணம் அடைந்த சித்து நியாமகவுடா எம்.எல்.ஏ.வின் மகன் ஆனந்த் நியாமகவுடா, பல்லாரி தொகுதியில் உக்ரப்பா ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உக்ரப்பா கர்நாடக மேல்-சபை உறுப்பினராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருவரும் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்கள். நீண்ட இழுபறிக்கு பிறகு பல்லாரி தொகுதி வேட்பாளரை காங்கிரஸ் அறிவித்துள்ளது நினைவுக்கூரத்தக்கது.

இந்த நிலையில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் நேற்று ஆனந்த் நியாமகவுடா, உக்ரப்பா ஆகியோரை சந்தித்து கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட வழங்கப் படும் ‘பி’ பாரமை வழங்கினார். அதனை இருவரும் பெற்றுக்கொண்டனர்.

மேலும் செய்திகள்