பந்தலூர் அருகே பசுவை அடித்துக்கொன்ற சிறுத்தைப்புலி

பந்தலூர் அருகே சிறுத்தைப்புலி பசுவை அடித்துக்கொன்றது.

Update: 2018-10-15 22:00 GMT

பந்தலூர்,

பந்தலூர் தாலுகா அத்தி மாநகர் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தைப்புலி நடமாட்டம் இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் அங்குள்ள தேயிலை தோட்டத்தில் பசுமாடு ஒன்று மேய்ச்சலில் ஈடுபட்டு இருந்தது. அப்போது சிறுத்தைப்புலி ஒன்று அந்த பசுவை அடித்துக்கொன்று இறைச்சியை தின்றுவிட்டு, தப்பி ஓடியது. மேய்ச்சலுக்கு சென்ற பசு திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த அதன் உரிமையாளர் ஜெபாஸ்டியன் என்பவர் நேற்று அக்கம்பக்கத்தில் தேடினார். அப்போது தேயிலை தோட்டத்தில் பசுமாடு இறந்து கிடப்பது தெரியவந்தது. உடனே இதுகுறித்து தேவாலா வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வனச்சரகர் சரவணன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துவ வந்து பார்வையிட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, தினந்தோறும் இரவு நேரத்தில் சிறுத்தைப்புலி ஊருக்குள் புகுந்து கால்நடைகளை அடித்துக்கொன்று வருகிறது. இதனால் வீட்டை விட்டு வெளியே அச்சத்துடன் சென்று வர வேண்டிய நிலை உள்ளது. எனவே அந்த சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்