தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஊழல் செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - ஆ.ராசா பேச்சு

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், ஊழல் செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று திருப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா பேசினார்.

Update: 2018-10-15 23:30 GMT

திருப்பூர்,

அ.தி.மு.க. ஊழல் ஆட்சியை கண்டித்து திருப்பூர் மாநகர தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நேற்று இரவு திருப்பூர் அரிசிக்கடை வீதியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு திருப்பூர் மாநகர தி.மு.க. செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன் தலைமை தாங்கினார். மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் பி.ஆர்.செந்தில்குமார் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் தி.மு.க. கொள்கை பரப்பு மாநில செயலாளர் ஆ.ராசா பேசியதாவது:–

தமிழகத்தில் தற்போதைய அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்கள் முதல் முதல்–அமைச்சர் வரை அனைவர் மீதும் ஊழல் புகார்கள் எழுந்துள்ளன. புகார் தெரிவிக்க செல்லும் அதிகாரிகளும் முறைகேடு புகாரில் சிக்கியுள்ளனர். வேறுவழியின்றி கோர்ட்டு உதவியை நாம் நாடி வழக்கு தொடுத்து வருகிறோம். முதல்–அமைச்சர் மீது ஊழல் புகார் தெரிவிக்கப்பட்ட பின்னரும் அவர் பதவியை ராஜினாமா செய்யாமல் இருக்கிறார். கடந்த காலங்களில் தி.மு.க. அமைச்சர்கள் மீது ஊழல் புகார் தெரிவிக்கப்பட்டாலும் எந்த புகாராவது நிரூபிக்கப்பட்டு இருக்கிறதா? என்பதை மக்கள் நினைத்து பார்க்க வேண்டும்.

கருணாநிதி ஆட்சியில் இருந்தபோதுதான் கை ரிக்ஷாவை ஒழித்து சைக்கிள் ரிக்ஷாவை ஏழைகளுக்கு வழங்கினார். பெண்களுக்கும் சொத்தில் உரிமை உண்டு என்பதை நடைமுறைப்படுத்தினார். திருநங்கைகளுக்கு அங்கீகாரம் கொடுத்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனித்துறையை உருவாக்கினார். மற்றவர்கள் நினைக்காததை, அடித்தட்டு ஏழை மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து திட்டங்களை நிறைவேற்றியவர் கருணாநிதி.

ஆரம்பக்கல்வியை அளித்தவர் காமராஜர் என்றால் கல்லூரி படிப்பை ஏழை மாணவ–மாணவிகளுக்கு அளிக்க உதவியவர் கருணாநிதி. கடந்த 1971–ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த காலத்தில் 100 அரசு கலை அறிவியல் கல்லூரிகளை கருணாநிதி தமிழகத்தில் உருவாக்கினார். அதன்பிறகே கல்லூரி படிப்பை ஏழை மாணவர்கள் எட்ட முடிந்தது. பிரசவத்தின் போது தாய் இறப்பு விகிதம், குழந்தை இறப்பு விகிதத்தை குறைக்கும் வகையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை கிராமங்கள்தோறும் ஏற்படுத்தியவர் கருணாநிதி.

வரும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும். தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், ஊழல் செய்தவர்கள் யாரும் தப்ப முடியாது. அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

இவ்வாறு ஆ.ராசா பேசினார்.

முன்னதாக பொதுக்கூட்டத்துக்கு வந்த ஆ.ராசாவுக்கு மாநகர தி.மு.க. சார்பில் ஆளுயர மாலை அணிவித்து வீரவாள் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. இதில் திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் க.செல்வராஜ், தொ.மு.ச. மாநில துணை தலைவர் கோவிந்தசாமி, மாவட்ட அவைத்தலைவர் திருமூர்த்தி, வேலம்பாளையம் பகுதி செயலாளர் ராமதாஸ், வடக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் தங்கராஜ், மாநகர அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, நிர்வாகிகள் எம்.எஸ்.ஆர்.ராஜ், எம்.எஸ்.மணி, கராத்தே மணி, ஆனந்தன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ராஜ்மோகன்குமார் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்