மின்இணைப்புக்கு 36 ஆண்டுகளாக போராட்டம்: தற்கொலைக்கு அனுமதி கேட்டு மனு கொடுத்த விவசாயி - கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
36 ஆண்டுகளாக போராடியும் மின்இணைப்பு கிடைக்காததால், தற்கொலை செய்ய அனுமதி கேட்டு திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி மனு கொடுத்தார். மேலும் அவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுப்பதற்கு ஏராளமானோர் நேற்று வந்தனர். அவர்கள் வைத்திருந்த பை களை போலீசார் சோதனை செய்து உள்ளே அனுமதித்த வண்ணம் இருந்தனர். அப்போது கையில் சிறிய பையுடன் வந்த ஒருவர், திடீரென பையில் இருந்து ஒரு பாட்டிலை எடுத்தார். அதில் மண்எண்ணெய் இருந் தது. பாட்டிலை திறந்து மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக் குளிக்க முயன்றார். அதற்குள் போலீசார் விரைவாக செயல்பட்டு அவரை தடுத்தனர். மேலும் மண்எண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், ஒட்டன்சத்திரம் தாலுகா எம்.அத்தப்பன்பட்டி வடுகபட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி பெரியசாமி (வயது 60) என்று தெரியவந்தது. போலீசாரிடம் அவர் கூறியதாவது:-
என்னுடைய விவசாய தோட்டத்துக்கு மின்இணைப்பு கேட்டு கடந்த 1982-ம் ஆண்டு மின்சார வாரியத்தில் விண்ணப்பித்தேன். ஆனால், இதுவரை மின்இணைப்பு வழங்கவில்லை. இதனால் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். அதில் எனக்கு மின்இணைப்பு வழங்கும்படி கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
எனினும், இதுவரை மின்இணைப்பு கிடைக்கவில்லை. இதுதொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்து இருக்கிறேன். அந்தவகையில் 36 ஆண்டுகளாக மின்இணைப்புக்கு போராடி வருகிறேன். இதுவரை கிடைக்கவில்லை. தற்போது நான் கடனாளி விட்டேன். இதனால் தற்கொலை செய்ய அனுமதி கேட்டு மனு கொடுக்க வந்தேன். இதனால் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையடுத்து பெரியசாமிக்கு, போலீசார் அறிவுரை கூறி மனு கொடுக்குமாறு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வேலுவிடம் அவர் மனு கொடுத்தார். விவசாயி ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம், கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.