சிங்காநல்லூர் குளக்கரையில் நடைபாதை வசதி; சிலைகள் கரைக்க, மீன்பிடிக்க தடை விதிக்க முடிவு

கோவையில் உள்ள சிங்காநல்லூர் குளத்தில் நடைபாதை வசதி செய்யப்படுகிறது. அத்துடன் அங்கு சிலைகள் கரைக்கவும், மீன்பிடிக்க தடை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2018-10-15 21:45 GMT

கோவை,

கோவை மாநகர பகுதியில் வாலாங்குளம், உக்கடம் பெரியகுளம், சிங்காநல்லூர் குளம், செல்வசிந்தாமணி குளம், செல்வாம்பதி குளம் உள்பட மொத்தம் 8 குளங்கள் உள்ளன. இதில் வாலாங்குளம், உக்கடம் பெரியகுளம் ஆகிய 2 குளங்களை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தி அங்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ளன. தற்போது அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

அதுபோன்று சிங்காநல்லூர் குளத்தை மேம்படுத்தி குளக்கரையில் நடைபாதை வசதி உள்பட பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக குளத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து, அங்கு என்னென்ன வசதிகள் செய்யலாம் என்று திட்ட அறிக்கை தயார் செய்த பின்னர் பணிகள் தொடங்கப் பட உள்ளன.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:–

சிங்காநல்லூர் குளம் 288 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளத்தில் 300–க்கும் மேற்பட்ட வகையான தாவரங்கள் உள்ளன. அதுபோன்று குளத்துக்குள் நன்னீர் ஆமைகள், மீன்கள் உள்பட பல்வேறு உயிரினங்களும் உள்ளன. எனவே இந்த குளம் நகர்ப்புற பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப் பட்டு உள்ளது.

மேலும் அந்த குளக்கரையில் பல்வேறு செடிகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. குளத்தில் ஏராளமான பறவைகள் வந்து செல்வதால், வேட்டையாடும் சம்பவங்கள் நடப்பதை தடுக்க குளத்துக்குள் செல்ல யாருக்கும் அனுமதியும் இல்லை. இதற்காக அங்கு காவலாளிகள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த குளத்தை மேம்படுத்தும் வகையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளக்கரையில் 4 கி.மீ. தூரத்துக்கு நடைபாதை வசதி செய்யப்பட உள்ளது. இது தவிர குளத்துக்குள் சாக்கடை கழிவுநீர் கலப்பதை தடுக்க, குளத்துக்கு தண்ணீர் வரும் 2 இடத்தில் சுத்திகரிப்பு நிலையங்களும் அமைக்கப்படுகிறது. குளத்தில் உள்ள தாவரங்கள் மற்றும் உயிரினங்களை பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், அது குறித்த புகைப்படங்களுடன் கூடிய அறிவிப்பும் வைக்கப்பட உள்ளது.

எனவே இந்த குளத்தில் அடுத்த ஆண்டு முதல் விநாயகர் சிலைகளை கரைக்கவும், குளத்தில் மீன்பிடிக்கவும் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. குளத்தில் மீன்பிடிப்பவர்களின் ஒப்பந்தகாலம் வருகிற டிசம்பர் மாதத்துடன் முடிகிறது. அதன் பின்னர் மீன்பிடிக்க அனுமதி கிடையாது. இது குறித்து இந்து அமைப்புகள் மற்றும் மீனவர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதுபோன்று குளத்தில் அமைக்கப்பட்டு உள்ள படகு இல்லமும் அங்கிருந்து மாற்றப்படுகிறது. ஏற்கனவே வாலாங்குளம், உக்கடம் குளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் படகு இல்லம் அமைக்கப்பட உள்ளதால், வேறு எந்த குளத்தில் படகு இல்லத்தை அமைக்கலாம் என்று ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:–

சிங்காநல்லூர் குளத்தில் நடைபாதை வசதி அமைக்கப்படுவது நல்லதுதான். ஆனால் இந்த குளத்தில்தான் நன்னீர் ஆமைகள் அதிகளவில் உள்ளது. குளக்கரையில் சாலை வசதி அமைக்கும்போது குளத்தில் உள்ள ஆமைகள் முட்டையிட வெளியே வரும்போது தார்சாலையோ, நடைபாதை வசதியோ அமைக்கும்போது அதை கடந்து செல்லாது.

இதன் காரணமாக இந்த இனங்கள் அழிந்து போவதற்கு வாய்ப்பு உள்ளது. இதைத்தடுக்க சுண்ணாம்பு கலந்த மண்சாலை அமைக்கும்போது, அந்த சாலை மண் சாலைபோன்றே இருக்கும். இதனால் ஆமை களுக்கும் இடையூறு இருக்காது. பிற உயிரினங்களும் அழிய வாய்ப்பு இல்லை. மேலும் மழை பெய்யும்போது சகதியும் ஏற்படாது. எனவே குளத்தில் உள்ள உயிரினங்கள் மற்றும் தாவரங்களுக்கு இடையூறு இல்லாமல் குளத்தை மேம்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்