திருப்பூர் கிருஷ்ணவேணிநகரில் கழிவுநீர் கால்வாய் வசதி வேண்டும்; கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
திருப்பூர் கிருஷ்ணவேணிநகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி அமைத்து கொடுக்க வேண்டும் என்று கலெக்டரிம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது திருப்பூர் 6–வது வார்டு கிருஷ்ணவேணி நகரை சேர்ந்த பொதுமக்கள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–
எங்கள் பகுதியில் 300–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதிகள் இல்லாததால், கழிவுநீர், மழைநீர் போன்றவை நிரம்பி ரோடுகளிலும், வீடுகளின் முன்பகுதிகளிலும் தேங்குகின்றன. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. தற்போது பெய்த மழையின் காரணமாக கடும் அவதிக்குள்ளாகி இருக்கிறோம்.
மழைநீர், சாக்கடை கழிவுநீர் எங்கள் பகுதியில் இன்னும் தேங்கி நிற்கிறது. இதனால் கொசு உற்பத்தியாகி, தொற்றுநோய் பரவும் அபாய நிலை உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாய் வசதிகள் செய்து தர வேண்டும். மழைநீர், சாக்கடை கழிவுநீர் கழிவுநீர் கால்வாயில் சீராக செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
இதுபோல் தெற்கு அவினாசிபாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் ‘‘எங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அத்திக்கடவு தண்ணீரை மட்டுமே நாங்கள் நம்பி இருக்கிறோம். இந்த குடிநீரும் சீராக கிடைப்பதில்லை. எங்கள் ஊரில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் மூலமாகவும் தண்ணீர் கிடைப்பதில்லை. எனவே சீராக குடிநீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என்று கூறியிருந்தனர்.
அலகுமலை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் ‘‘அலகுமலையில் ஈஸ்வரன் கோவில் அருகே புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தில் அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் சேர்ந்து தனியார் ஒருவர் கம்பி முள்வேலி அமைத்து வருகிறார். இந்த இடமானது புறம்போக்கு நிலமாகும். எனவே கம்பி முள்வேலி அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும்’’ என்றனர்.