வ.உ.சி. பூங்காவில் : வாலிபரிடம் செல்போன் பறித்த 2 பேரை துரத்தி பிடித்த போலீசார் - தப்பி ஓடியவருக்கு வலைவீச்சு
கோவை வ.உ.சி. பூங்காவில் வாலிபரிடம் செல்போன் பறித்த 2 பேரை போலீசார் துரத்தி பிடித்தனர். தப்பி ஓடிய ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கோவை,
கோவை சாய்பாபா காலனி கே.கே.புதூரை சேர்ந்தவர் மந்தீப் (வயது 32). இவர் கோவை வ.உ.சி. பூங்காவுக்கு நேற்றுமுன்தினம் வந்தார். அவர் பூங்காவின் வெளியே நின்று தனது நண்பருடன் செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் திடீரென்று மந்தீப்பின் கையில் இருந்த செல்போனை தட்டிப்பறித்துவிட்டு தப்பி செல்ல முயன்றனர்.
உடனே அவர் திருடன், திருடன் என்று கத்தினார். இதை கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு திரண்டனர். மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ரோந்து போலீசாரும் அங்கு காரில் வந்தனர். அவர்கள், மோட்டார் சைக்கிள்களில் தப்பிச்சென்றவர்களை காரில் துரத்தி சென்றனர்.
இதை பார்த்ததும் அவர்கள் மோட்டார் சைக்கிள்களில் அதிவேகமாக தப்பி செல்ல முயன்றனர். ஆனால் போலீசார் விரட்டிச்சென்று 2 பேரை மடக்கி பிடித்தனர். அதில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார். பிடிபட்ட 2 பேரை போலீசார் ரேஸ்கோர்ஸ் போலீஸ்நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள்.
அதில் அவர்கள், கோவை பி.என்.புதூரை சேர்ந்த கமலேஷ் (22), ரஞ்சித் (20) என்பதும், கோவை மாநகர பகுதியை சேர்ந்த 2 பெண்களிடம் நேற்று முன்தினம் மாலையில் 2 செல்போன்களை பறித்துச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களி டம் இருந்து 3 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய படையப்பா (22) என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.