விபத்துகளை தடுக்கும் வகையில் போலீசாருக்கு ரூ.26¾ லட்சத்தில் சாலை பாதுகாப்பு உபகரணங்கள் சூப்பிரண்டு சரவணன் வழங்கினார்

விபத்துகளை தடுக்கும் வகையில் போலீசாருக்கு ரூ.26¾ லட்சத்தில் சாலை பாதுகாப்பு உபகரணங்களை சூப்பிரண்டு சரவணன் வழங்கினார்.;

Update: 2018-10-14 21:45 GMT
கடலூர், 

கடலூரை விபத்து இல்லாத மாவட்டமாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் எடுத்து வருகிறார். இதையொட்டி நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களில் ஒலிப்பெருக்கி வைத்து முக்கிய சந்திப்புகளில் போலீசார் விபத்து தடுப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாவட்டத்தில் விபத்தை தடுக்கும் வகையில் ரூ. 26 லட்சத்து 77 ஆயிரத்து 500 செலவில் சாலை பாதுகாப்பு உபகரணங்களை 46 போலீஸ் நிலையங்கள், 4 போக்குவரத்து போலீஸ் நிலையங்கள், 13 நெடுஞ்சாலை ரோந்து போலீசார், 7 அதிரடிபடை வாகன போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் வழங்கினார்.

இதில் இரவில் ஒளிரும் சோலார் பிரதிபலிப்பான், சாலை வேக தடுப்பு கட்டை, போக்குவரத்து கூம்பு, வாகன தணிக்கை மேற்கொள்ள கோல் விளக்கு, வெள்ளை பிரதிபலிப்பான் ஆடை, வெள்ளை கையுறை, ஆரஞ்சு கையுறை, தடுப்பு கட்டை நாடா, பிரதிபலிப்பான் நாடா, விபத்து மற்றும் சாலை பழுதை சுட்டிக்காட்ட காந்தகோள் விளக்கு, தகவல் பரிமாற்றத்துக்கு ஒலிப்பெருக்கி, எச்சரிக்கை பிரதிபலிப்பான் உள்பட பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் வீரராகவன், வேதரத்தினம், உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் லாமேக், பாண்டியன், சுந்தரவடிவேல், ஜவஹர்லால், தங்கவேல் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்