சூளகிரி அருகே லாரி மீது பஸ் மோதி பெண் பலி 6 பேர் படுகாயம்

சூளகிரி அருகே லாரி மீது பஸ் மோதிய விபத்தில் பெண் பலியானார். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2018-10-14 23:00 GMT
ஓசூர்,

கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து, திருவண்ணாமலை நோக்கி தமிழ்நாடு அரசு பஸ் நேற்று சென்றது. இதனை, திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியை சேர்ந்த சிவகுமார்(வயது 43) ஓட்டிச் சென்றார். கண்டக்டராக செங்கத்தை சேர்ந்த மணி(50) என்பவர் பணியில் இருந்தார். இந்த பஸ்சில், 33 பேர் பயணம் செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் பக்கமாக வந்த போது, முன்னால் கிரானைட் கற்கள் ஏற்றி சென்ற லாரியை பஸ் முந்த முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக லாரியின் பக்கவாட்டில் பஸ் வேகமாக மோதியது.

பெண் பலி

இதில் பஸ்சின் இடது பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இடிபாடுகளுக்குள் சிக்கி 7 பேர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர். இது குறித்து தகவல் அறிந்த, சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள், பொதுமக்கள் உதவியுடன் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டனர்.

தொடர்ந்து காயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில், திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை சேர்ந்த ராமசாமி என்பவரது மனைவி காசியம்மா(வயது 45) என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மற்ற 6 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்