பிளாஸ்டிக் பொருட்களுக்கு அடுத்த மாதம் முதல் தடை : தண்ணீர் பாக்கெட்டுகள் விற்றாலும் கடைகளுக்கு ‘சீல்’ அதிகாரிகள் தகவல்
வேலூர் மாவட்டத்தில் அடுத்த மாதம் முதல் தண்ணீர் பாக்கெட்டுகள் விற்பனை செய்தால் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர்,
மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களால் பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்க தமிழ்நாட்டில் ஜனவரி மாதம் முதல் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்திக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜனவரி மாதம் நெருங்குவதை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் தடை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே வியாபாரிகளிடத்தில் இருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்துகொள்ள அவர்களுக்கு 45 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த கால அவகாசத்துக்குள் வியாபாரிகள் வைத்துள்ள பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்துகொள்ள வேண்டும்.
அதன்பிறகு பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் தண்ணீர் பாக்கெட்டுகளை விற்பனை செய்யக்கூடாது என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தண்ணீர் பாக்கெட்டுகளை மறுசுழற்சி செய்ய முடியாது என்பதால் அடுத்த மாதத்தில் இருந்து விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதை மீறி தண்ணீர் பாக்கெட்டுகள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே போன்று குடோன்களில் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தால் குடோன்களுக்கும் ‘சீல்’ வைக்க கலெக்டர் ராமன் உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.