மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்துவிட்டு ஓடும்போது கால் தவறி கீழே விழுந்து மந்திரி ஜி.டி.தேவேகவுடா காயம்

மைசூருவில் தசரா விழாவையொட்டி, மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்துவிட்டு ஓடும்போது கால் தவறி கீழே விழுந்து மந்திரி ஜி.டி.தேவேகவுடா காயம் அடைந்தார்.

Update: 2018-10-14 23:00 GMT
மைசூரு, 

மைசூருவில் தசரா விழாவையொட்டி, மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்துவிட்டு ஓடும்போது கால் தவறி கீழே விழுந்து மந்திரி ஜி.டி.தேவேகவுடா காயம் அடைந்தார்.

மாரத்தான் போட்டி

மைசூரு தசரா விழாவின் 5-வது நாளான நேற்றும், மைசூருவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விழாக்கள், விளையாட்டு போட்டிகள் நடந்தன. மைசூரு பல்கலைக்கழகம் எதிரில் உள்ள ஓவல் மைதானத்தில் மாரத்தான் போட்டி நடந்தது. போட்டியை மாவட்ட பொறுப்பு மந்திரி ஜி.டி.தேவேகவுடா தொடங்கி வைத்தார். மேலும் அவர் போட்டியில் கலந்து கொண்டு சிறிது தூரம் ஓடினார்.

இந்த போட்டி 3 பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்டது. சிறுவர்-சிறுமிகள் 4 கிலோ மீட்டர் தூரமும், இளைஞர்-இளம்பெண்கள் 10 கிலோ மீட்டர் தூரமும், 40 வயதுக்கு மேற்பட்டோர் 6 கிலோ மீட்டர் தூரமும் ஓட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் மொத்தம் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஓடினர். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் தசரா குழுவினர் செய்திருந்தனர். முடிவில் வெற்றிபெற்றவர்களுக்கு சான்றிதழ்களும், ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது.

மந்திரி காயம்

முன்னதாக மந்திரி ஜி.டி.தேவேகவுடா போட்டியில் கலந்து கொண்டு ஓடும்போது, எதிர்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு மூட்டு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்து அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் மந்திரி ஜி.டி.தேவேகவுடாவை மீட்டனர். மேலும் அங்கிருந்த மருத்துவ குழுவினரும் உடனடியாக அங்கு ஓடி வந்தனர். அவர்கள் மந்திரி ஜி.டி.தேவேகவுடாவுக்கு சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தினர்.

மேலும் செய்திகள்