அரவக்குறிச்சி அருகே கிணற்றில் மீன் பிடித்த சிறுவன் தவறி விழுந்து சாவு

அரவக்குறிச்சி அருகே கிணற்றில் மீன் பிடித்த சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்தார்.

Update: 2018-10-14 22:15 GMT

அரவக்குறிச்சி,

அரவக்குறிச்சியை அடுத்த பள்ளப்பட்டி புது பட்டாணி தெருவை சேர்ந்தவர் அப்துல்ரகுமான். இவரது மகன் யாசர்அராபத்(வயது 9). இவர் பள்ளப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 4–ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளி விடுமுறை என்பதால் பள்ளப்பட்டி உருசு மைதானம் பின்புறம் நங்காஞ்சி ஆற்றின் அருகே உள்ள ஊர் பொது கிணற்றில் மீன் பிடிக்க சென்றுள்ளார். வெகு நேரம் ஆகியும் தனது மகன் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சி அடைந்த அப்துல்ரகுமான் சம்பந்தப்பட்ட கிணற்றிற்கு சென்று பார்த்தார். அப்போது கிணற்று மேட்டில் யாசர்அராபத்தின் ஆடைகள் மட்டும் இருந்தன. இதனால் தனது மகன் கிணற்றில் மூழ்கியிருக்கலாம் என்று கருதினார்.

போலீசார் விசாரணை

பின்னர் இதுகுறித்து அரவக்குறிச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யாசர்அராபத்தின் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக பள்ளப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவனின் உடலை பார்த்து அவரது பெற்றோர் கதறி அழுதது பார்ப்போரை கண்கலங்க செய்தது. இதுகுறித்த புகாரின் பேரில் அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்