துத்திப்பட்டு கிரிக்கெட் மைதானத்துக்கு அடிப்படை வசதி - அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உறுதி

புதுவை கிரிக்கெட் மைதானத்திற்கு சாலை, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உறுதி அளித்துள்ளார்.

Update: 2018-10-14 22:30 GMT

புதுச்சேரி,

புதுவை மாநில கிரிக்கெட் சங்கத்துக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அந்தஸ்து அளித்துள்ளது. இதன் காரணமாக இதுவரை மாவட்ட அணியாக செயல்பட்டு வந்த புதுச்சேரி கிரிக்கெட் அணி தற்போது ரஞ்சிக்கோப்பை உள்ளிட்ட தேசிய போட்டிகளில் நேரடியாக பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில் புதுவையில் உள்ள விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பயிற்சி பெறும் வகையிலும், பல்வேறு போட்டிகள் நடத்தவும் துத்திப்பட்டு அருகே கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த மைதானத்துக்கு அடிப்படை வசதியான சாலை வசதியும், மின்சார வசதியும் செய்யப்படவில்லை.

இந்த நிலையில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவை, புதுச்சேரி கிரிக்கெட் அசோசியே‌ஷன் (பொறுப்பு) செயலாளர் சந்திரன், செயற்குழு உறுப்பினர்கள் சண்முகசுந்தரம், ராஜ்கண்ணு மற்றும் நிர்வாகிகள் சந்தித்து பேசினர். அப்போது, துத்திப்பட்டு கிரிக்கெட் மைதானத்துக்கு சாலை மற்றும் மின்வசதிகள் செய்து தர, தனியார் இடத்தை ஆர்ஜிதம் செய்து கொடுக்கவேண்டும். அதற்கான மார்க்கெட் விலையை நாங்களே தருவதோடு, சாலையையும் நாங்களே அமைத்து கொள்கிறோம் என்றனர்.

அப்போது அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், இது தொடர்பாக வருகிற 22–ந் தேதி நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் பேசி சாலை, மின்சார வசதி செய்ய நல்ல முடிவை தெரிவிப்பதாக கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடம் உறுதி அளித்தார். பின்னர் அவர்கள் முதல்–அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தரும்படி வலியுறுத்தினர்.

மேலும் செய்திகள்