சங்கரன்கோவிலில் கட்டிடங்களில் கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்டால் அபராதம் நகரசபை ஆணையாளர் எச்சரிக்கை
சங்கரன்கோவிலில் கட்டிடங்களில் கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என நகரசபை ஆணையாளர் தாணுமூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சங்கரன்கோவில்,
சங்கரன்கோவிலில் கட்டிடங்களில் கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என நகரசபை ஆணையாளர் தாணுமூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் நகரசபை பகுதியில் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களுடைய வீடுகள் மற்றும் கட்டிடங்களில் பயனற்று கிடக்கும் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி தண்ணீர் தேங்காத வண்ணம் பராமரிக்க வேண்டும். நகரசபை பணியாளர்கள் தங்கள் வீடுகளை ஆய்வு செய்து மருந்து ஊற்ற வரும்போது அனுமதிக்க வேண்டும்.
நிலவேம்பு குடிநீர்
வீடுகளில் அல்லது தெருக்களில் யாருக்காவது காய்ச்சலுடன் இருமல், சளி போன்றவை இருநாட்களுக்கு மேல் இருந்தால் நகராட்சி மருத்துவமனை அல்லது அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகி்ச்சை பெற்று நகராட்சி அலுவலகத்திற்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். காய்ச்சல் இருந்தால் மருத்துவமனை சிகிச்சையுடன் மாதுளம்பழம் சாறு, இளநீர், பப்பாளி இலைச்சாறு, நிலவேம்பு குடிநீர் மற்றும் குடிநீர் தொடர்ந்து குடித்து உடல்நிலையில் நீர்ச்சத்து குறையாமல் கவனித்துக்கொள்ளவேண்டும். இந்த பணிகளை சங்கரன்கோவில் டெங்கு காய்ச்சல் தடுப்பு சுகாதார அலுவலர் பாலச்சந்தர் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் பிச்சையா பாஸ்கர், ராமச்சந்திரன், சக்திவேல், மாதவராஜ்குமார் ஆகியோர் செய்து வருகின்றனர்.
அபராதம்
இந்த ஆய்வின்போது ஏதேனும் கொசுப்புழுக்கள் தங்களது கட்டிடங்களில் கண்டறியப்பட்டால் அபராத தொகையாக ரூ.10,000 முதல் ரூ.1 லட்சம் வரை பொது சுகாதார சட்டத்தின்படி விதிக்கப்படும். நகராட்சி பகுதியில் டெங்கு இல்லாத குடியிருப்பு, கட்டிடங்களை கண்டறிந்து கொசுப்புழு இல்லாத வீடு என அந்த வீட்டின் உரிமையாளர்களை பாராட்டி அந்த வீடுகளில் பொதுமக்கள் அறியும் வண்ணம் பாராட்டு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் மேற்கண்ட நடைமுறைகளை பின்பற்றி அபராத நடவடிக்கைகளில் இருந்து தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.