கிணறு ஆழப்படுத்தும் பணியின்போது எந்திரத்தின் கயிறு அறுந்து விழுந்து தொழிலாளி சாவு ஊத்துமலை அருகே பரிதாபம்

ஊத்துமலை அருகே கிணறு ஆழப்படுத்தும் பணியின் போது எந்திரத்தின் கயிறு அறுந்து விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2018-10-14 21:30 GMT
ஆலங்குளம், 

ஊத்துமலை அருகே கிணறு ஆழப்படுத்தும் பணியின் போது எந்திரத்தின் கயிறு அறுந்து விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

கிணறு ஆழப்படுத்தும் பணி

நெல்லை மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள ஆர்.நவநீதகிருஷ்ணபுரத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவருக்கு சொந்தமான தோட்டம் அந்த பகுதியில் உள்ளது. நேற்று அந்த கிணற்றில் குறிஞ்சான்குளத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான “வீஞ்ச்“ (கற்களை அள்ளி மேலே அனுப்பும் எந்திரம்) மூலம் ஆழப்படுத்தும் பணி நடைபெற்றது. இந்த பணியில் கங்கணாங்கிணறு அருந்ததியர் தெருவை சேர்ந்த குருவர் (வயது 50), ரதமுடையார்புரத்தை சேர்ந்த கோபால் (37) ஆகிய 2 தொழிலாளிகள் ஈடுபட்டிருந்தனர்.

அவர்கள் கிணற்றில் உள்ளே நின்று வேலை பார்த்தனர். பின்னர் மாலையில் வேலை முடிந்து 2 பேரும் கற்கள் அள்ளும் எந்திரத்தில் ஏறி மேலே வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென எந்திரத்தின் கயிறு அறுந்தது. இதில் 2 பேரும் கிணற்றின் உள்ளே விழுந்து, படுகாயம் அடைந்தனர்.

ஒருவர் சாவு

உடனே அங்கிருந்தவர்கள் அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே குருவர் பரிதாபமாக உயிரிழந்தார். கோபால் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்