இலங்கை தமிழர்களுக்கு எதிரான போரில் காங்கிரஸ் குற்றவாளி மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு

இலங்கையில் நடந்த தமிழர்களுக்கு எதிரான போரில் காங்கிரஸ் தான் குற்றவாளி என மயிலாடுதுறையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Update: 2018-10-14 23:15 GMT
மயிலாடுதுறை,

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நேற்று பா.ஜனதா நாகை மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் நாஞ்சில்பாலு வரவேற்றார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மாநில பொதுச்செயலாளர் கருப்புமுருகானந்தம், தஞ்சை மண்டல செயலாளர் வரதராஜன், மாநில விவசாய அணி முன்னாள் தலைவர் காவிகண்ணன், மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி அமைப்பாளர் சேதுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜனதா அரசின் சாதனை இந்திய அளவில் மட்டுமின்றி உலக அளவிலும் பேசப்படுகிறது. இதன் தாக்கம் ஒவ்வொரு மாநில அளவிலும் உணரப்படுகிறது. பா.ஜனதா கட்சி எடுக்கும் முடிவின் அடிப்படையில் தமிழக அரசியல் இயங்குகிறது. பா.ஜனதா கட்சி என்ன முடிவு எடுக்கிறது என்று தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

எழுச்சி மிகுந்த தலைவராக மோடி செயல்படுகிறார். கடந்த 4½ ஆண்டுகளில் அளவற்ற சாதனைகள் புரிந்துள்ளோம். ஏமாற்றப்பட்ட தமிழ் சமுதாயத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் பா.ஜனதா கட்சி உள்ளது. இலங்கையில் நடந்த தமிழர்களுக்கு எதிரான இறுதி போரில் இலங்கை அரசின் வெற்றிக்கு காரணம் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அரசு தான் என இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே கூறுகிறார்.

இலங்கையில் 1½ லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு ராஜபக்சே ஒரு கருவி தான். அந்த போரில் காங்கிரஸ் கட்சி தான் குற்றவாளி. எனவே வருகிற தேர்தலில் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணியை முறியடித்து வெற்றி பெற வேண்டும். நாகை மாவட்டத்தை பா.ஜனதா கட்சியின் கோட்டையாக மாற்ற வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி 400 இடங்களுக்கு மேல் கைப்பற்றும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முடிவில் மயிலாடுதுறை நகர தலைவர் கண்ணன் நன்றி கூறினார்.

கூட்டத்தை தொடர்ந்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பழ.நெடுமாறன் கூறியுள்ளது போல, விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருந்தால் தமிழ் சமுதாயம் நிச்சயம் மகிழ்ச்சி அடையும். பெட்ரோல், டீசல் ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்குள் கொண்டு வரப்படுமா? என்பதை மாநில அரசுகள் தான் முடிவு செய்ய வேண்டும்.

பெட்ரோல், டீசல் விலை கட்டுக்குள் இருக்க வேண்டும் என கூறுகிறார்கள். நமது நாட்டில் உள்ள எண்ணெய் வளத்தை எடுத்து உபயோகப்படுத்தக்கூடாது என்றால், விலையை எப்படி கட்டுப்படுத்த முடியும்? விதிமுறைக்கு மாறாக மத்திய அரசு எப்போதும் செயல்படாது.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்