தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடந்த இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேரில் ஆய்வு

தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடந்த இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.

Update: 2018-10-14 22:00 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடந்த இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.

துப்பாக்கி சூடு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த மே மாதம் 22-ந்தேதி மக்கள் கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது கலவரம் ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கி சூட்டில் 13 பேர் இறந்தனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக தூத்துக்குடி தென்பாகம், வடபாகம், சிப்காட், புதுக்கோட்டை உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் மொத்தம் 249 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதில் துப்பாக்கி சூடு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 5 வழக்குகள் மட்டும் சி.பி.சி.ஐ.டி போலீசுக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டு 173 வழக்குகளை ஒரே வழக்காக விசாரிக்க உத்தரவிட்டது. ஏற்கனவே 5 வழக்குகளை விசாரித்து வந்த சி.பி.சி.ஐ.டி. போலீசார், மற்ற 173 வழக்குகளுக்கான ஆவணங்களையும் பெற்று இணைப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டனர்.

சி.பி.ஐ. விசாரணை

இந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டு துப்பாக்கி சூடு வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி கடந்த ஆகஸ்டு மாதம் 14-ந் தேதி உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் திரட்டிய ஆவணங்களை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தனர். அதன்பேரில் சென்னை சி.பி.ஐ. துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக 15 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது. வழக்கு விசாரணை அதிகாரியாக துணை சூப்பிரண்டு ரவி நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கு விசாரணையை தொடங்கி உள்ளனர்.

நேற்று முன்தினம் சி.பி.ஐ. சூப்பிரண்டு சரவணன் தலைமையில் துணை சூப்பிரண்டு ரவி மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு தூத்துக்குடிக்கு வந்தது. இந்த குழுவினர் தொடர்ந்து 3 நாட்கள் விசாரணை நடத்துகின்றனர். தற்போது சம்பவம் நடந்த இடங்களில் ஆய்வு மற்றும் ஆவணங்கள் சேகரிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். அதன்படி நேற்று முன்தினம் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த போலீஸ் நிலையங்களில் ஆவணங்களை ஆய்வு செய்தனர். சம்பவ விவரங்களையும் கேட்டறிந்தனர்.

சம்பவ இடங்களில் ஆய்வு

நேற்று சூப்பிரண்டு சரவணன், துணை சூப்பிரண்டு ரவி ஆகியோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமலையிடம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து துப்பாக்கி சூடு நடந்த இடம், வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்ட இடம் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டனர். தொடர்ந்து தூத்துக்குடி இந்திய உணவுக்கழக குடோன் ரவுண்டானா உள்ளிட்ட துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த அனைத்து பகுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அதேபோன்று சம்பவம் தொடர்பாக புகார் அளித்த துணை தாசில்தார், தாசில்தார் ஆகியோரையும் வரவழைத்து சம்பவ விவரங்களை கேட்டறிந்தனர். இன்றும் (திங்கட்கிழமை) தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

மேலும் செய்திகள்