சாலையில் கிடந்த சகதியால் விபத்து; மோட்டார் சைக்கிளில் கணவருடன் சென்ற பெண் பலி

சகதியில் சிக்கி மோட்டார் சைக்கிள் கவிழ்ந்த விபத்தில் கணவருடன் சென்ற பெண் பலியானார்.

Update: 2018-10-14 21:45 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 27). இவரது மனைவி குமாரி(22). இவர்களுக்கு 2 வயதில் ஹரிஷ் என்ற குழந்தை உள்ளது. இந்தநிலையில் மணிகண்டன் குடும்பத்துடன் ராஜபாளையம் சொக்கநாதன்புத்தூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொள்ள சென்றார்.

பின்னர் அங்கிருந்து நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் மனைவி, குழந்தையுடன் சித்துராஜபுரத்திற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மழை பெய்தது. இதனால் பெரியகுளம் கண்மாய் கரை மண் கரைந்து ஸ்ரீவில்லிபுத்தூர்–ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சகதியாக காணப்பட்டது.

இந்த சாலையில் வரும்போது மோட்டார் சைக்கிள் சகதியில் சிக்கி கவிழ்ந்தது. இதனால் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். அப்போது பின்னால் வந்த லாரி, குமாரி மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உடல் நசுங்கி இறந்தார். விபத்தில் காயம் அடைந்த மணிகண்டன் மற்றும் ஹரீசை போலீசார் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்