உளுந்தூர்பேட்டை பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது : ரூ.2 லட்சம் மீட்பு
உளுந்தூர்பேட்டை பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் மீட்கப்பட்டது.
விழுப்புரம்,
உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஷாகுல்அமீது, சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், மணிகண்டன் மற்றும் போலீசார் உளுந்தூர்பேட்டை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
அதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை சேர்ந்த முத்துராமன் மகன் கார்த்திக் என்கிற கார்த்திகேயன் (வயது 28), சாமுவேல் மகன் ரவி(27) என்பது தெரியவந்தது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் கடந்த மாதம் 26-ந் தேதி உளுந்தூர்பேட்டை முருகன் கோவில் தெருவில் நிறுத்தி வைத்திருந்த அரிகோவிந்தன் என்பவரின் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து ரூ.2 லட்சத்தை திருடியுள்ளனர்.
பின்னர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருவெறும்பூரை சேர்ந்த சிவா, காஜல், விஜயகுமார், மேரி ஆகியோருடன் சேர்ந்து உளுந்தூர்பேட்டை கிராம நிர்வாக அலுவலகம் முன்பு நிறுத்தி வைத்திருந்த ராமசாமி என்பவருடைய மோட்டார் சைக்கிள் பெட்டியில் இருந்த ரூ.25 ஆயிரத்தை திருடியதும், உளுந்தூர்பேட்டை பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து கார்த்திக், ரவி ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்த ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்தை மீட்டனர்.இதற்கிடையே உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர் தப்பி செல்ல முயன்ற சிவா, மேரி ஆகிய 2 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரத்தை போலீசார் மீட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள காஜல், விஜயகுமார் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.