மாணவர்களுக்கு கஞ்சா, மது விற்பனை போலீஸ்-பொதுமக்கள் நட்புறவு கூட்டத்தில் புகார்

தேனி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா, மது விற்பனை செய்யப்படுவதாகவும் அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீஸ்-பொதுமக்கள் நட்புறவு கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

Update: 2018-10-14 21:45 GMT
தேனி,


தேனி அருகே அன்னஞ்சி விலக்கு பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் மாவட்ட போலீஸ் துறை சார்பில், போலீஸ்-பொதுமக்கள் நட்புறவு கூட்டம் நடந்தது. இதில் அல்லிநகரம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், பல்வேறு சமுதாய தலைவர்கள், வியாபாரிகள், அரசியல் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசும் போது கூறியதாவது:-

போலீசாருக்கும், பொதுமக்களுக்குமான நட்புறவு பலமாக இருந்தால் அங்கு குற்றங்கள் குறையும். சமூகத்தில் நடக்கும் தவறுகள் குறித்து போலீசாருக்கு தகவல்களை கொடுக்க வேண்டும். தகவல்கள் கொடுப்பவர்களின் பெயர் விவரங்கள் வெளியிடப்பட மாட்டாது. சட்டவிரோதமாக மது விற்பனை, கஞ்சா விற்பனை நடந்தாலோ சமூக விரோத செயல்கள் நடந்தாலோ தயக்கமின்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். யாரேனும் சிலர் அடிதடியில் ஈடுபட்டால் ஒட்டுமொத்தமாய் கூட்டம் சேர்ந்து கலவரத்தில் ஈடுபடக் கூடாது.

போலீசுக்கு தகவல் கொடுத்தால் உடனே சம்பவ இடத்துக்கு போலீஸ் அதிகாரிகள் வந்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள். அதை விட்டுவிட்டு பதிலுக்கு தாக்குதல், கல்வீச்சு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டால் இளைஞர்களும் ஆர்வக்கோளாறில் அந்த கலவரத்தில் ஈடுபடுவார்கள். அப்போது இளைஞர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்வதால் அவர்களின் எதிர்காலம் மட்டும் இன்றி அவர்களை சார்ந்த குடும்பத்தினரின் எதிர்காலமும் பாதிக்கப்படும். குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க அரசும், போலீஸ் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போலீசார் கேட்டால் தான் தகவல் கொடுக்க வேண்டும் என்பது இல்லை. சமூக அக்கறையுடன் தகவல்கள் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் கருத்துகளை தெரிவித்தனர். அப்போது அவர்கள் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-

தேனி மாவட்டத்தில் பல இடங்களில் மது விற்பனை, கஞ்சா விற்பனை நடக்கிறது. போலீசார் நடவடிக்கை எடுத்தாலும் மீண்டும், மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. மாணவர்களுக்கும் கஞ்சா, மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. இதுபோன்ற போதைக்கு அடிமையாகும் நபர்களால் சமூகத்தில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடக்கின்றன.

எனவே, கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர்கள் மீது நடவடிக்கை எடுப்பது போல், வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வரும் மொத்த வியாபாரிகளை கண்டறிந்து மாவட்டத்துக்குள் கஞ்சா நுழையாத அளவுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதியின்றி பொது இடங்களில் மதுவிற்பனை நடக்கிறது. அவை அரசு மதுபானங்கள் தான். டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக வாங்கி வந்து விற்பனை செய்யப்படுகிறது. எனவே, மாவட்டத்தில் உள்ள சுமார் 90 மதுக்கடைகளையும் கண்காணிக்க வேண்டும்.

அங்கு இருந்து மொத்தமாக மதுபானம் வாங்கி, அனுமதியின்றி விற்பனை செய்வதற்காக கடத்திச் செல்வதை தடுக்க வேண்டும். மதுபான கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, சிறுவர்கள், மாணவர்களுக்கு மதுவிற்பனை செய்யும் விற்பனையாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுருளிராஜா, போலீஸ் துணை சூப்பிரண்டு ஆறுமுகம், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சரவணதேவேந்திரன், சண்முகலட்சுமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்