ரூ.1½ கோடியில் நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார்

6 ஆயிரத்து 788 பயனாளிகளுக்கு ரூ.1½ கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார்.;

Update: 2018-10-13 23:30 GMT
கன்னிவாடி,

திண்டுக்கல்லை அடுத்த ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள காய்கறி மகத்துவ மையத்தில், வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் துறை ஆகியவை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதற்கு கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கினார். உதயகுமார் எம்.பி. முன்னிலை வகித்தார்.

இந்த நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசும்போது, மாவட்டம் முழுவதும் ரூ.1 கோடியே 80 லட்சம் செலவில் நீர்நிலைகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. குளங்களில் இருந்து இலவசமாக வண்டல் மண் எடுப்பதற்கு 22 ஆயிரத்து 470 விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது, என்றார்.

இதையடுத்து 6 ஆயிரத்து 788 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 45 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வனத்துறை அமைச்சர் வழங்கினார். முன்னதாக, மாவட்டம் முழுவதும் தனியார் பங்களிப்புடன் நீர்நிலைகளை சீரமைத்த பணிகள் குறித்த தகவல் அடங்கிய ‘வான்சிறப்பு’ என்ற நூலினை வனத்துறை அமைச்சர் வெளியிட, அதனை எஸ்.எஸ்.எம். குழும தலைவர் வேலுச்சாமி பெற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில், முன்னாள் மேயர் மருதராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணியன், வசந்தா, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜ்மோகன், ஜெயலலிதா பேரவை செயலாளர் சுப்பிரமணி, எல்.டி. வங்கி தலைவர் பசும்பொன், பழக்கனூத்து கூட்டுறவு சங்க தலைவர் வெங்கடாசலம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


மேலும் செய்திகள்