என்.மகேஷ் மந்திரி பதவியை ராஜினாமா செய்தாலும் கூட்டணி ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை தேவேகவுடா பேட்டி

என்.மகேஷ் மந்திரி பதவியை ராஜினாமா செய்தாலும் கூட்டணி ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தேவேகவுடா தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-13 22:00 GMT
ஹாசன், 

என்.மகேஷ் மந்திரி பதவியை ராஜினாமா செய்தாலும் கூட்டணி ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தேவேகவுடா தெரிவித்துள்ளார்.

அரக்கல்கோடு தசரா விழா

ஹாசன் மாவட்டம் அரக்கல்கோடு பகுதியில் நேற்று தசரா விழா தொடங்கியது. இந்த தசரா விழாவை முன்னாள் பிரதமரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அங்கு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடக மாநிலத்தில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளும்படி பிரதமர் மோடிக்கு பலமுறை கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை மாநிலத்தின் வளர்ச்சிக்கு மோடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி இருப்பதால், அவர் கர்நாடகத்தை கண்டுகொள்ளவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் மோடி கர்நாடகத்தில் போட்டியிட்டால் வரவேற்பேன். ஏனெனில் அப்போதாவது கர்நாடகத்துக்கு அவர் வளர்ச்சி பணிகளை செய்வார்.

ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை

மண்டியா நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்பாளரை தேர்ந்தெடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து உள்ளூர் தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் குமாரசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இன்னும் 2 நாட்களில் மண்டியா நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கப்படும். மந்திரி பதவியை என்.மகேஷ் ராஜினாமா செய்துள்ளது, கூட்டணி ஆட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கட்சியின் மேலிட தீர்மானத்தின்படி என்.மகேஷ் மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அவர் ராஜினாமா செய்தாலும் கூட்டணி ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை. இந்த விஷயத்தில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். ராஜினாமா செய்தது அவருடைய சொந்த முடிவு. இதில் எங்களுக்கு எந்த தொடர்பும் கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்