உளுந்தூர்பேட்டை அருகே : விவசாயியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர் கைது

உளுந்தூர்பேட்டை அருகே விவசாயியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2018-10-12 21:45 GMT
விழுப்புரம், 


உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வண்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் குமார் (வயது 28), விவசாயி. இவருக்கு சேந்தமங்கலம் ஊராட்சி எல்லையில் சொந்தமாக விளை நிலம் உள்ளது. அந்த நிலத்தில் வரப்பு சீர்செய்தல் பணிக்காக தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 16 ஆயிரம் ஒதுக்கப்பட்டது. இதுபற்றி அறிந்த குமார் சம்பவத்தன்று தனக்கு ஒதுக்கப்பட்ட தொகையை பற்றி கேட்பதற்காக திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு சென்றார். அப்போது அங்கிருந்த பணி மேற்பார்வையாளர் வேலுவை சந்தித்து, வரப்பு சீர்செய்தல் பணிக்காக தனக்கு ஒதுக்கப்பட்ட ரூ.1 லட்சத்து 16 ஆயிரம் குறித்து கேட்டார்.

அதற்கு பணி மேற்பார்வையாளர் வேலு, வரப்பு சீர்செய்தல் பணிக்கு ஒதுக்கப்பட்ட ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்தை தரவேண்டுமானால் தனக்கு லஞ்சமாக ரூ.10 ஆயிரம் கொடுக்க வேண்டும் என கறாராக கூறினார்.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத குமார், இதுபற்றி விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் மற்றும் சப்-இன்ஸ்பெகடர் எழிலரசி தலைமையிலான போலீசார் நேற்று காலை திருநாவலூருக்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் குமாரிடம் ரசாயன பொடி தடவிய ரூ.10 ஆயிரத்தை கொடுத்து, அதனை பணி மேற்பார்வையாளர் வேலுவிடம் கொடுக்குமாறு கூறினர். பணத்தை பெற்றுக் கொண்ட குமார், லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கூறிய ஆலோசனையின்படி திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு சென்றார். பின்னர் அங்கிருந்த வேலுவிடம் வரப்பு சீர்செய்தல் பணிக்காக தனக்கு ஒதுக்கப்பட்ட ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்தை தருமாறு கூறி தான் கொண்டு வந்திருந்த ரூ.10 ஆயிரத்தை கொடுத்தார்.

அப்போது அந்த பணத்தை வேலு வாங்கிய போது, அலுவலகத்தின் வெளியே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விரைந்து வந்து வேலுவை கையும் களவுமாக பிடித்தனர். இதையடுத்து வேலுவை கைது செய்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அவரை விழுப்புரத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்