கட்சி அலுவலகத்தை உரிமை கொண்டாடுவதில் பிரச்சினை: அ.தி.மு.க.-அ.ம.மு.க. நிர்வாகிகள் மீது வழக்கு
தேனியில் அ.தி.மு.க. மாவட்ட தலைமை அலுவலகத்தை உரிமை கொண்டாடுவதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அ.தி.மு.க., அ.ம.மு.க. நிர்வாகிகள் 10-க்கும் மேற்பட்டவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தேனி,
தேனி ஆர்.எம்.டி.சி. காலனியில் அ.தி.மு.க. மாவட்ட தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரு அணிகளாக செயல்பட்டபோது, கட்சி அலுவலகத்துக்குள் ஓ.பன்னீர்செல்வம் செல்லாமல் இருந்து வந்தார். மாவட்ட செயலாளராக இருந்த தங்கதமிழ்செல்வன் கட்டுப்பாட்டில் அலுவலகம் இருந்து வந்தது.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இரு அணிகளும் இணைந்து விட்ட நிலையிலும் இந்த கட்சி அலுவலகத்துக்குள் ஓ.பன்னீர்செல்வம் இதுவரையில் செல்லவில்லை. இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றிய பிறகு மாவட்ட தலைமை அலுவலகத்துக்குள் ஓ.பன்னீர்செல்வம் செல்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், இதுநாள் வரை தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் அது எதிர்பார்ப்பாகவே இருந்து வருகிறது.
இதற்கிடையே கடந்த மார்ச் மாதம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சிலர் இந்த அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தனர். இந்த கட்சி அலுவலகத்தை உரிமை கொண்டாடுவது தொடர்பாக அ.தி.மு.க. சார்பிலும், தினகரன் தலைமையில் செயல்பட்ட அணி சார்பிலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டு இருந்தன. இந்த மனுக்கள் மீதான விசாரணை நிலுவையில் இருந்து வந்தது.
இந்த நிலையில், இந்த கட்சி அலுவலகத்தை யார் கைப்பற்றுவது? அலுவலகத்துக்குள் யார் நுழைவது? என்ற பிரச்சினை இருந்து வருகிறது. இருதரப்பினரும் கட்சி அலுவலகத்துக்கு உரிமம் கொண்டாடுவதால் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதி இருதரப்பினர் மீதும் பழனிசெட்டிபட்டி போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதில் தற்போது அ.தி.மு.க. மாவட்ட துணை செயலாளராக உள்ள முருக்கோடை ராமர், ஒன்றிய செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஆர்.டி.கணேசன், பழனிசெட்டிபட்டி பேரூர் செயலாளர் தீபன்சக்கரவர்த்தி, நிர்வாகிகள் முத்துபாலாஜி, ரத்தினசபாபதி, பாண்டி மற்றும் சிலர் மீதும், அ.ம.மு.க. தேனி ஒன்றிய செயலாளர் ராஜசேகரன், நகர செயலாளர் காசிமாயன் நிர்வாகிகள் தமிழ், சரவணன் மற்றும் சிலர் மீதும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, ‘கட்சி அலுவலகம் கட்டப்பட்ட போது அ.தி.மு.க.வில் பிளவு இல்லை. கட்சி அலுவலகம் அமைந்துள்ள இடம் எம்.ஜி.ஆர். அறக்கட்டளை பெயரில் பூங்குன்றன் என்பவரின் நிர்வாக பொறுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. பூங்குன்றன் தற்போது டி.டி.வி.தினகரனுடன் உள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 145 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இருதரப்பினரையும் விசாரணை நடத்தி பிரச்சினையை சுமுகமாக தீர்த்து வைக்க பெரியகுளம் ஆர்.டி.ஓ.வுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. ஆர்.டி.ஓ. தலைமையில் விசாரணை நடத்தி, பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்’ என்றனர்.