தனியார் நிறுவன ஊழியர் கொலை வழக்கில் ; விழுப்புரம் கோர்ட்டில் புதுச்சேரி கூலிப்படையினர் 4 பேர் சரண்
தனியார் நிறுவன ஊழியர் கொலை வழக்கில் விழுப்புரம் கோர்ட்டில் புதுச்சேரி கூலிப்படையினர் 4 பேர் சரண் அடைந்தனர்.;
விழுப்புரம்,
கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்தவர் பழனிவேல் மகன் அருண்பிரகாஷ் (வயது 23). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2-ந் தேதி அதிகாலை மாமல்லபுரம் அருகே உள்ள திருவிடந்தை பகுதியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
இதுகுறித்த தகவலின்பேரில் மாமல்லபுரம் போலீசார் விரைந்து சென்று அருண்பிரகாசின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், அருண்பிரகாசுக்கும், அவர் வேலை பார்த்து வந்த அதே நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஒரு பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டதும், இந்த விவகாரம் தொடர்பாக அருண்பிரகாஷ், புதுச்சேரியை சேர்ந்த கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதன் அடிப்படையில் கூலிப்படையினரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தேடுவதை அறிந்த புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த ராஜி (32), மதகடிப்பட்டு மதியரசு (24), அரியாங்குப்பம் முகிலன் (24), புதுச்சேரி ரெயின்போ காலனியை சேர்ந்த சங்கர் (27) ஆகிய 4 பேர் நேற்று காலை விழுப்புரம் முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். இதையடுத்து நீதிபதி மும்தாஜ் உத்தரவின்பேரில், ராஜி உள்ளிட்ட 4 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.