தீபத் திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

மகாதீப திருவிழாவையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அருணாசலேஸ்வரர் கோவிலில் போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்ரவர்த்தி ஆய்வு செய்தார்.

Update: 2018-10-09 23:15 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நவராத்திரி விழா, ஆடி பிரம்மோற்சவம், ஆனி பிரம்மோற்சவம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும் கார்த்திகை மாதத்தில் வரும் தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

தீபத் திருவிழா 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான திருவிழா வருகிற நவம்பர் 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 23-ந் தேதி அதிகாலை பரணி தீபமும், மாலையில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. தீபத் திருவிழாவின் போது திருவண்ணாமலைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். அப்போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கபடுவார்கள்.

இந்த ஆண்டு தீபத் திருவிழாவின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்ரவர்த்தி நேற்று வேட்டவலம் ரோடு, தண்டராம்பட்டு ரோடு, செங்கம் ரோடு, ஈசான்யா மைதானம் என 9 இடங்களில் அமைக்கப்பட உள்ள தற்காலிக பஸ் நிலையங்களை நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் மதியம் அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆய்வு மேற்கொண்டார்.

இது குறித்து அவர் கூறுகையில், “தீபத் திருவிழாவின் போது கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு பணிகள் குறித்தும், இந்த ஆண்டு கூடுதலாக மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது” என்றார்.

அப்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அண்ணாதுரை, பழனி, குணசேகரன், கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் போலீசார், கோவில் அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்