குடிநீர்பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு ஆய்வு: 134 இணைப்புகள் சட்டவிரோதமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது

கரூரில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு 14 குழுக்கள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 134 குடிநீர் இணைப்புகள் சட்டவிரோதமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என குடிநீர் வடிகால் வாரிய உயரதிகாரி மகேஸ்வரன் தெரிவித்தார்.

Update: 2018-10-09 23:00 GMT

நொய்யல்,

கரூர் மாவட்டத்தில் உள்ள குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் பொருட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், சட்டவிரோதமாக குடிநீர் உறிஞ்சுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் முன்னிலையில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் நடந்த ஆய்வு கூட்டத்தின் போது அறிவுறுத்தினர். அதன் பேரில் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து 85 பொறியாளர்களை கொண்டு 14 குழுக்கள் நேற்று கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது காவிரி, அமராவதி ஆற்றில் உள்ள நீரேற்று நிலையங்களில் இருந்து சேகரிக்கப்படும் நீரின் அளவு எவ்வளவு?, அந்த நீர் முழுவதும் குடியிருப்புகளுக்கு வழங்கப்படுகிறதா? என்பன உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தனர்.

மேலும் தமிழக அரசின் குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் சி.என்.மகேஸ்வரன் நேற்று கரூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற ஆய்வு பணியை பார்வையிட்டார். மண்மங்கலம், க.பரமத்தி, அரவக்குறிச்சி பகுதிகளுக்குட்பட்ட 564 குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் வகையில் மரவாப்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட மேலாண்மை இயக்குனர் நிருபர்களிடம் கூறியதாவது:–

கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் குடிநீர் இணைப்புகள் பெறும் 1,440 குக்கிராமங்களில் 500 குக்கிராமங்கள் முழுவதுமாக ஆய்வு செய்து முடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்மூலம் 134 குடிநீர் இணைப்புகள் சட்டவிரோதமாக இருப்பதும், அதில் 17 இணைப்புகள் முதன்மை நீர்த்தேக்கத்தொட்டியில் இருந்து தனியார் நீர்த்தொட்டிகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 24 மணி நேரத்திற்குள் இணைப்புகள் அதன் உரிமையாளர்கள் துண்டிக்கவில்லை எனில் அவர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சட்டத்திற்குட்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மோட்டார் மூலம் சட்டவிரோதமாக குடிநீர் உறிஞ்சுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனை தொடர்ந்து க.பரமத்தி, குஞ்சம்பட்டி, மலைக்கோவிலூர், சின்னகேத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீரேற்று நிலையங்கள், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகளையும் மேலாண்மை இயக்குனர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக அரசு விருந்தினர் மாளிகையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட கலெக்டர் அன்பழகன் ஆகியோருடன் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் மகேஸ்வரன் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.

மேலும் செய்திகள்