சேலத்தில் இடியுடன் கனமழை: வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது; பொதுமக்கள் அவதி
சேலத்தில் இடியுடன் பெய்த கனமழை காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். மேலும் கால்வாயில் விழுந்த பிளஸ்-2 மாணவர் மீட்கப்பட்டார்.;
சேலம்,
சேலம் மாநகர பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழை ஒரு மணி நேரத்திற்கு மேல் பெய்தது. மழையின் காரணமாக தாழ்வான பகுதிகள், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வீடுகளுக்குள் மழைநீருடன் சாக்கடை நீர் புகுந்தது. சேலம் சங்கர் நகர், அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி, கிச்சிப்பாளையம் என மாநகரத்தின் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்தது.
கிச்சிப்பாளையம் கடம்பூர் முனியப்பன் கோவில் பகுதி மற்றும் தாழ்வான இடங்களில் இருந்த வீடுகளுக்குள் தண்ணீர் சூழ்ந்து கொண்டது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் விடிய விடிய தவித்தனர். பின்னர் அவர்கள் வீட்டில் இருந்த பொருட்களை பாதுகாப்பாக உயரமான இடங்களுக்குள் தூக்கி வைத்தனர். தண்ணீரையும் பாத்திரங்கள் மூலம் வெளியே அகற்றினர். இதன் காரணமாக பொதுமக்கள் அவதியடைந்தனர். காந்தி விளையாட்டு மைதானத்தில் மழைநீர் தேங்கியதால் நேற்று நடைபயிற்சிக்கு வந்தவர்கள் சிரமம் அடைந்தனர். அங்குள்ள சாய் விடுதி அருகே நின்ற மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது.
கிச்சிப்பாளையம் வழியாக வரும் ராஜவாய்க்காலில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையில் சினிமா பார்த்து விட்டு வந்த சிறுவன், ராஜவாய்க்காலில் தவறி விழுந்து பலியானான். மறுநாள் தான் அந்த சிறுவன் உடல் மீட்கப்பட்டது. இதையடுத்து ராஜவாய்க்காலை தூர்வார வேண்டும் என கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்தநிலையில் நேற்று முன்தினம் சேலம் ஜோதி டாக்கீஸ் பகுதியை சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் மாணவர் ஆகாஷ்ராஜ் (வயது 17) மாலை டியூசன் சென்று விட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பினார். கிச்சிப்பாளையம் சத்திமூர்த்தி தெருவில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது திடீரென வந்த மழைநீர் அவரை சாக்கடை பகுதிக்குள் இழுத்து சென்றது. மோட்டார் சைக்கிளுடன் கால்வாயில் விழுந்து அவர் தத்தளித்தார். அங்கிருந்த இளைஞர்கள் ஓடி வந்து மாணவரை மீட்டனர். ஆனால் மோட்டார் சைக்கிள் இழுத்து செல்லப்பட்டது. இதனை நேற்று காலை பொதுமக்கள் மீட்டனர்.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜவாய்க்காலில் விழுந்து சிறுவன் பலியானான். இதன்பிறகாவது அதிகாரிகள் ராஜவாய்க்காலை தூர்வாரியிருக்கலாம். ஆனால் அவர்கள் கண்டு கொள்ளவே இல்லை. தற்போது பிளஸ்-2 மாணவர் கால்வாயில் விழுந்து மீட்கப்பட்டு உள்ளார். இனியாவது ராஜவாய்க்காலை விரைந்து தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. பல முறை கலெக்டரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது குறித்து உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
சேலம் மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-சேலம் 72.2 காடையாம்பட்டி 58 எடப்பாடி 47.6 பெத்தநாயக்கன்பாளையம் 31 ஏற்காடு 30.4 ஓமலூர் 30 சங்ககிரி 18 மேட்டூர் 15.2 வாழப்பாடி 8.3 தம்மம்பட்டி 7.2 வீரகனூர் 6 கெங்கவல்லி 5.4 கரியகோவில் 4 ஆத்தூர் 3.6 ஆணைமடுவு 2 என்ற அளவில் மழை பெய்துள்ளது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 338.9 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.