மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த சிலர் முயற்சி: ‘மும்பை அனைவருக்கும் சொந்தமானது’ அசோக் சவான் பேட்டி

மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாக குற்றம்சாட்டிய காங்கிரஸ் தலைவர் அசோக் சவான், மும்பை அனைவருக்கும் ெசாந்தமானது என்று கூறினார்.

Update: 2018-10-09 20:46 GMT
மும்பை,

நாக்பூரில் வட இந்தியர்கள் சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் கலந்து கொண்டு பேசும்போது, “வட இந்தியர்கள் தங்களது வேலையை நிறுத்தி கொண்டால் மும்பை ஸ்தம்பித்து விடும், மும்பை மக்களுக்கு உணவு கூட கிடைக்காது” என்றார்.

அவரது பேச்சுக்கு சிவசேனா, நவநிர்மாண் சேனா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து காங்கிரஸ் மாநில தலைவர் அசோக் சவானிடம் நிருபர்கள் பேட்டி கண்டனர்.

அப்போது அவர் கூறுகையில், மும்பை மற்றும் மராட்டியம் அனைத்து தரப்பினருக்கும் சொந்தமானது. மராத்தியர் மற்றும் மராத்தியர் அல்லாதோர் இடையே பிரிவினையை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்கின்றனர் என்று சிவசேனா, நவநிர்மாண் சேனா கட்சியினருக்கு பதிலடி கொடுத்தார்.

மேலும் மராட்டியத்தில் பல மாவட்டங்களில் நிலவும் வறட்சியை எதிர்கொள்ள தேவேந்திர பட்னாவிஸ் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், தாகம் எடுக்கும் போது தான் கிணறு தோண்டும் பழக்கத்தை அரசு கொண்டுள்ளதாகவும் அசோக் சவான் குற்றம் சாட்டினார்.

மேலும் செய்திகள்