ஒகேனக்கல் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
தர்மபுரி ஒன்றியம் பொம்மிடி அருகே உள்ள மங்கலம் கொட்டாய் பகுதியில் 100–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு கடந்த 3 மாதமாக ஒகேனக்கல் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.;
பொம்மிடி,
தர்மபுரி ஒன்றியம் பொம்மிடி அருகே உள்ள மங்கலம் கொட்டாய் பகுதியில் 100–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு கடந்த 3 மாதமாக ஒகேனக்கல் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. இந்த கிராமத்திற்கு ஒகேனக்கல் குடிநீர் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தநிலையில் நேற்று அந்த கிராமத்தை சேர்ந்த 50–க்கும் மேற்பட்ட பெண்கள் ஒகேனக்கல் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் தொப்பூர்–பொம்மிடி சாலையில் மங்கலம்கொட்டாய் பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் பொம்மிடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனால் பெண்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து அந்த கிராமத்திற்கு உடனடியாக ஒகேனக்கல் குடிநீர் வழங்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டனர்.