காந்திய அறநெறியை பின்பற்றினால் மாணவ சமுதாயம் முன்னேறும் - கவர்னர் கிரண்பெடி அறிவுரை
காந்திய அறநெறியை பின்பற்றினால் மாணவ சமுதாயம் முன்னேறும் என்று கவர்னர் கிரண்பெடி பேசினார்.;
புதுச்சேரி,
புதுவை பல்கலைக்கழகத்தின் பன்னாட்டு ஆய்வியல், அரசியல்துறை மற்றும் காந்திய ஆய்வியல் மையம் சார்பில் காந்தியின் 150–வது பிறந்தநாளை முன்னிட்டு தற்போதைய சூழலில் காந்தியின் அகிம்சை நெறிகள் என்ற தலைப்பிலான ஒருநாள் கருத்தரங்கு நேற்று நடந்தது.
இதன் தொடக்க விழாவுக்கு புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங் தலைமை தாங்கினார். காந்திய ஆய்வில் மையத்தின் தலைவர் பேராசிரியர் மூர்த்தி வரவேற்று பேசினார்.
விழாவில் கவர்னர் கிரண்பெடி கலந்துகொண்டு கருத்தரங்கை தொடங்கிவைத்தார். மேலும் சென்னையில் இயங்கி வருகின்ற காந்தி அறநெறி கழகத்தின் கிளையையும் தொடங்கிவைத்தார்.
அப்போது கவர்னர் கிரண்பெடி பேசியதாவது:–
மாணவர்கள் இளம்பருவத்தில் அடுத்தவர்களிடம் எதையும் எதிர்பார்க்காமல், தங்களுக்கு தாங்களே உயர்த்திக்கொண்டு நம்மை சுற்றியுள்ள சமூகத்திற்கு உதவவேண்டும். தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் பல்வேறு கோடி பணம் செலவு செய்து இந்தியாவை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வரும் சூழலில் மாணவர்கள் தங்களின் கடமையையும், பொறுப்பையும் உணர்ந்து தங்களின் வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
நேரம் தவறாமை, எளிமை, நேர்மை, சுகாதார வாழ்வியல் முறை போன்ற காந்தி தன் வாழ்நாளில் பின்பற்றிய அனைத்து அறநெறிகளையும் பின்பற்றி நடந்தால் மாணவ சமூகம் முன்னேறும். வாழ்வில் உன்னத நிலையை அடைய வேண்டுமானால் காந்தியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான ஆவணப்படங்களை கட்டாயம் மாணவர்கள் பார்க்கவேண்டும்.
இவ்வாறு கவர்னர் கிரண்பெடி பேசினார்.
தொடர்ந்து கிரேட் ஆன்மா என்ற காந்தி குறித்த ஆவணப்படம் திரையிடப்பட்டது. கருத்தரங்கில் புதுவையை சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பதிவாளார் சசிகாந்ததாஸ், நிதி அதிகாரி பிரகாஷ், மக்கள் தொடர்பு அதிகாரி மகேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.