பா.ஜ.க.வின் ‘ரிமோட்’ கட்டுப்பாட்டில் அ.தி.மு.க. அரசு அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத் பேட்டி

பா.ஜ.க.வின் ‘ரிமோட்’ கட்டுப்பாட்டில் அ.தி.மு.க. அரசு செயல்படுகிறது என்று அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத் தெரிவித்தார்.

Update: 2018-10-09 21:45 GMT
தேனி,

தேனி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பழனிசெட்டிபட்டியில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. ஜே.எம்.ஆரூண், மாநில பொதுச்செயலாளர் அருள்பெத்தையா, சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் சந்திரசேகரன், மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் அசன்ஆரூண் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாட்டில் தற்போது மோடிக்கு எதிராகவும், ராகுல் காந்திக்கு ஆதரவாகவும் அலை வீசத் தொடங்கி இருக்கிறது. அதன் தாக்கத்தை ராஜஸ்தான், சத்தீஷ்கார், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபெறுகிற தேர்தல் வெளிப்படுத்தும். தமிழகத்தை பொறுத்தவரை பா.ஜ.க.வின் ‘ரிமோட்’ கட்டுப்பாட்டில் அ.தி.மு.க. அரசு செயல்படுகிறது.

2014-ம் ஆண்டு நாடாளுமன்றதேர்தலின் போது மோடி செய்த சித்துவிளையாட்டுகள், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எடுபடாது. தற்போதைய பா.ஜ.க. ஆட்சியில் சுதந்திரம் பாதுகாக்கப்படவில்லை. ராகுல்காந்தியால் சுதந்திரம் பாதுகாக்கப்படும். அரசு துறைகளுக்கு பா.ஜ.க. அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. தேர்தல் ஆணையமும் பா.ஜ.க.வின் அழுத்தத்தில் செயல்படுகிறது.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மீது நம்பிக்கை இழந்து பல மாநிலங்களில் புகார்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் முக்கியமான 2 இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படாமல் தாமதிக்கப்பட்டு வருகிறது.

ரபேல் விமானம் கொள்முதல் ஊழல் மற்றும் நாட்டில் பல்வேறு முக்கிய பிரச்சினைகளுக்கு மோடி பதில் அளிக்க மறுக்கிறார். கடந்த 4 ஆண்டுகளில் மக்களை பா.ஜ.க. அரசு ஏமாற்றி விட்டது. பா.ஜ.க.வின் மோசடி மற்றும் ஊழலை ஒவ்வொரு பகுதியில் வாழும் மக்களிடமும் கொண்டு சென்று தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறோம்.

தமிழகத்தில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி வலுவாகவே உள்ளது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எத்தனை இடங்களில் காங்கிரஸ் போட்டியிடும் என்பது கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பின்னரே தெரிவிக்கப்படும். எப்படி இருந்தாலும் தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற பாடுபடுவோம்.

பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்நிறுத்துவோம். கூட்டணி கட்சிகளிடையே மாறுபட்ட கருத்துகள் இருந்தால், தேர்தலுக்கு பிறகு பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்வோம். சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து கட்சியின் உயர்மட்டக்குழு ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ளது. அதுவே, என்னுடைய கருத்து ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்