நீர்நிலைகளின் கரைகளை சேதப்படுத்தக்கூடாது கிருஷ்ணகிரி கலெக்டர் எச்சரிக்கை

நீர்நிலைகளின் கரைகளை சேதப்படுத்தக்கூடாது, என்று கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் எச்சரித்துள்ளார்.

Update: 2018-10-09 23:00 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நீர்நிலைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் டாக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் நடராஜன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் (பொறுப்பு) உமாமகேஸ்வரி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சுசீலாராணி ஆகியோா முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

கிருஷ்ணகிரி அணையின் இடது மற்றும் வலதுபுற கால்வாயில் தண்ணீர் வினாடிக்கு 200 கனஅடி செல்ல வேண்டும். ஆனால், 140 கனஅடிக்கு குறைவாக தான் தண்ணீர் செல்கிறது. எனவே, இருபுறங்களில் உள்ள கால்வாயில் 400 கனஅடி தண்ணீர் செல்லும் வகையில் கரைகளை உயர்த்தி கட்ட வேண்டும்.

தண்ணீர் செல்லும் வகையில் கால்வாயை பராமரித்து, கடைமடை ஏரிகளுக்கு தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அணையில் புதிய மதகு பொருத்தப்பட்ட பிறகு 40 முதல் 41 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் வீணாக திறந்து விடப்பட்டுள்ளது. எனவே 50 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் வலியுறுத்தி கூறினார்கள்.

தொடர்ந்து கலெக்டர் பிரபாகர் பேசியதாவது:-

விவசாயிகளின் கோரிக்கைள் தொடர்பாக உரிய துறை அலுவலர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டு சாத்திய கூறுகள் உள்ள பகுதிகளில் நீர் நிலை திட்டங்களை நிறைவேற்றும் வகையில் ஏரிகள், குளங்கள், குட்டைகளுக்கு நீர் கொண்டு செல்லவும், தடுப்பணைகள் உள்ளிட்டவற்றை அமைப்பதற்கு ஏற்ற நிலையை அறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் ஏரிகள், நீர்நிலைகளின் கரைகளை சேதப்படுத்தக்கூடாது. அதை மீறி சேதப்படுத்தினாலோ, துஷ்பிரயோகம் செய்தாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், அணையில் 41 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையில் அதிகளவு தண்ணீர் வரும். அப்போது சேமித்து வைத்து ஏரிகளுக்கு திருப்புவதை விட, தற்போது வரும் தண்ணீரை முடிந்த அளவிற்கு ஏரிகளில் நிரப்ப வேண்டும் என்பதற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையில் புதிய மதகு பொருத்தப்பட்டுள்ள பிறகு தண்ணீரை படிப்படியாக உயர்த்தி வருகிறோம். தண்ணீர் வீணாகாமல் ஏரி, குட்டைகளில் சேமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றனர்.

இதில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்