பான்கங்கா குளத்தில் மூழ்கி சிறுவன் பலி முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்க வந்த இடத்தில் பரிதாபம்

வால்கேஷ்வரில் உள்ள பான்கங்கா குளத்தில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

Update: 2018-10-09 22:00 GMT
மும்பை,

மும்பை மாட்டுங்கா நியூ கணேஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் ஆஜிமா. இவர் துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் சிவா கோலி (வயது15). நேற்று முன்தினம் மகாளய அமாவாசையை யொட்டி சிவா கோலி தனது அத்தையுடன் வால்கேஷ்வரில் உள்ள பான்கங்கா தெப்பகுளத்திற்கு சென்றிருந்தான்.

இதன்பின்னர் மாலை 3 மணி அளவில் அத்தை முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்துவிட்டு சிவா கோலியை தேடினார். எங்கும் கிடைக்காமல் போனதால் அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தார். இதில் சிறுவன் சிவா கோலி குளத்தில் குளித்து கொண்டிருந்ததாக தெரிவித்தனர்.

இதன்பேரில் அப்பகுதியை சேர்ந்த நீச்சல் வீரர்கள் குளத்தில் குதித்து சிறுவனை ேதடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சிறுவன் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டான்.

இதனால் பதறிப்போன குடும்பத்தினர் ஆம்புலன்சு இல்லாததால், சிறுவனை மோட்டார் சைக்கிளில் வைத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் நடத்திய பரிசோதனையில் சிவா கோலி ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.

இதுபற்றி தகவல் அறிந்த வால்கேஷ்வர் போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்