பெட்ரோல்- டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்

பெட்ரோல்- டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று, காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Update: 2018-10-09 22:30 GMT
கொரடாச்சேரி,

திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் கொரடாச்சேரியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரைவேலன் தலைமை தாங்கினார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சிரிவெல்ல பிரசாத் கலந்து கொண்டு பேசினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் கீழானூர்.ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. ராம.சுப்புராம் ஆகியோர் பேசினர். திருவாரூர் நகர தலைவர் மடப்புரம் சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் திருவாரூர், மன்னார்குடி, நன்னிலம், திருத்துறைப்பூண்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடி வாரியாக பூத் கமிட்டி அமைப்பது, தேர்தலின் போது பா.ஜனதா அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கேட்பது, நாள்தோறும் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும். விலை உயர்வை கட்டுப்படுத்திடும் வகையில் மத்திய- மாநில அரசுகள் பெட்ரோல்- டீசல் மீதான வரி விதிப்பை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் காலியாக உள்ள பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். முன்னதாக மாவட்ட பொதுச்செயலாளர் வீரமணி வரவேற்றார். முடிவில் கொரடாச்சேரி நகர செயலாளர் நடராஜன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்