திருச்சி அருகே இடி–மின்னலுடன் பலத்த மழை: 2 வீடுகளின் மேற்கூரை இடிந்தது; பெண் படுகாயம்

திருச்சி அருகே இடி–மின்னலுடன் பெய்த பலத்த மழைக்கு 2 வீடுகளின் மேற்கூரை இடிந்து விழுந்தது.

Update: 2018-10-09 23:00 GMT
திருச்சி,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. நவலூர்குட்டப்பட்டு, சத்திரப்பட்டி, துறையூர், தாத்தையங்கார்பேட்டை, முசிறி உள்ளிட்ட புறநகர் பகுதியில் இடி–மின்னலுடன் பலத்த மழை பெய்தது. திருச்சி நாகமங்கலம் அருகே ஈச்சம்தோட்டத்தில் நேற்று முன்தினம் இரவு இடி–மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. மின்னல் தாக்கியும், பலத்த மழைக்கும் அப்பகுதியில் உள்ள 4 மரங்கள் சாய்ந்தன.

ஈச்சம் தோட்டத்தில் பலத்த மழை மற்றும் இடி–மின்னலுக்கு மாற்றுத்திறனாளிகளான சங்கர், வேலுச்சாமி ஆகியோருக்கு சொந்தமான 2 வீடுகளில் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டால் போடப்பட்ட மேற்கூரை இடிந்து விழுந்தது. மேற்கூரை இடிந்து வீட்டிற்குள் விழுந்ததில் டி.வி., மின்விசிறி மற்றும் பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோகப்பொருட்கள் சேதம் அடைந்தன.


2 வீடுகளின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் சங்கரின் மனைவி சிவகாமி இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் அப்பகுதியில் மரங்கள் சாய்ந்து விழுந்ததில் மின்கம்பங்கள் சேதமாயின. இதனால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு விடிய, விடிய மின்சாரம் இன்றி கிராம மக்கள் அவதிப்பட்டனர். நேற்று காலை மின்வாரிய ஊழியர்கள் சென்று சீரமைப்பு பணியில் ஈடுபட்டு சரிசெய்தனர்.

திருச்சி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:–

நவலூர் குட்டப்பட்டு–44.80, துறையூர்–31, முசிறி–17, தாத்தயங்கார் பேட்டை–15, குப்பம்பட்டி–14, திருச்சி ஜங்‌ஷன்–6.40, தென்பறநாடு–6, தேவிமங்கலம்–2.80, மணப்பாறை–2.20, திருச்சி ஏர்போர்ட்–1.50. துவாக்குடி–1.40, பொன்னணியாறு டேம்–1.20, லால்குடி–1.04,

ஆக சராசரியாக 5.85 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. நேற்று திருச்சி மாநகரில் காலை முதலே கடும் வெயில் அடித்தது. மாலையில் வெயிலின் தாக்கம் குறைந்து இதமான சூழல் நிலவியது.

மேலும் செய்திகள்