ஓட்டப்பிடாரம் அருகே, கொல்லம்பரும்பு கிராமத்தை மழை நீர் சூழ்ந்தது : பொதுமக்கள் கடும் அவதி

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கொல்லம்பரும்பு கிராமத்தில் குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்ததால் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

Update: 2018-10-09 22:00 GMT
ஓட்டப்பிடாரம்,


ஓட்டப்பிடாரம் அருகே கொல்லம்பரும்பு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் சுற்று வட்டார பகுதியில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையால் காட்டு பகுதியில் வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளம், நேற்று மாலையில் கொல்லம்பரும்பு ஊருக்குள் புகுந்து குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்தது. அதே போல் அந்த ஊரில் உள்ள தனியார் பள்ளிக்கூடம் மற்றும் ஒரு சில வீடுகளுக்குள்ளும் மழை தண்ணீர் புகுந்தது. தெருக்களிலும் மழை நீர் தேங்கியது. இதனால் வீட்டுக்கு வெளியே வரமுடியாமல் பொதுமக்கள் தவிர்த்தனர்.

சிலர் வீடுகளுக்குள் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற முயற்சித்தனர். ஆனால் தெருவிலும் தண்ணீர் தேங்கி இருந்ததால், வீடுகளில் இருந்த தண்ணீரை வெளியேற்ற முடியாமல் தவித்தனர். இந்த மழை நீர் நேற்று காலை வரை குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து காணப்பட்டது. இதனால் இரவு முதல் விடிய விடிய பொதுமக்கள் தூங்க முடியாமல் தவித்தனர். அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்துக்குள் தேங்கிய மழை தண்ணீரை பள்ளி நிர்வாகம் வெளியேற்றியது. ஆனாலும் பள்ளியை சுற்றிலும் மழை தண்ணீர் தேங்கி கிடந்தது. நேற்று மாலை வரை அந்த கிராமத்தை தண்ணீர் சூழ்ந்திருந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறும் போது, ஆண்டு தோறும் காட்டு பகுதியில் பெய்யும் மழையால் ஊருக்குள் தண்ணீர் வருவது வழக்கமாக இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

எனவே மழை தண்ணீர் ஊருக்குள் வராதவாரு, தடுப்பணை அமைத்து கால்வாய் மூலம் ஊருக்கு அருகே 300 மீட்டர் தூரத்தில் உள்ள குளத்திற்கு மழை தண்ணீரை திரும்பிவிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்